சாய்னா, ஶ்ரீகாந்த் வெற்றி - உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் | World Badminton Championships 2018: Saina Nehwal, Kidambi Srikanth into the next round

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/08/2018)

கடைசி தொடர்பு:07:00 (01/08/2018)

சாய்னா, ஶ்ரீகாந்த் வெற்றி - உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர் இந்திய நட்சத்திர வீரர்களான சாய்னா மற்றும் ஶ்ரீகாந்த். 

பேட்மின்டன்

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா தனது துவக்க ஆட்டத்தில் 38 நிமிடங்களில் துருக்கியின் அலியே டெமிர்பேக்கை 21-17, 21-8 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் அயர்லாந்தின் நஹத் ங்குயெனை 21-15, 21-16 என நேர் செட்களில் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அபியானை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். சாய் பிரனீத் தனது 2 வது சுற்றில் ஸ்பெயினின் லுயிஸ் என்ரிக் பெனல்வருடன் மோதுகிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் தைவானின் சியாங் காய் ஹசின் - ஹங் ஷி ஹான் இணையுடன் மோதியது அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை முதல் செட்டை இழந்தாலும் 9-21, 21-10, 21-17 எனக் கைப்பற்றி போட்டியை வென்றனர். அடுத்த சுற்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் உலக அளவில் 2வது இடம் வகிக்கும் ஜப்பானின் யூகி- சயகா இணையை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணை 21-19, 12-21, 21-19 என்ற புள்ளிக் கணக்கிலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா இணை 10-21, 21-17, 21-18 என்ற புள்ளியிலும் வெற்றி பெற்றனர். 

மகளிர் இரட்டையர் பிரிவில் குஹோ கர்க் - நின்க்‌ஷி ப்ளாக் ஹஸாரிகா, மேகனா - பூர்விஷா இணைகளும் ஆடவர் இரட்டையர் பிரிவில் தருண் கோனா - சௌரப் சர்மா , அர்ஜுன் - ராமச்சந்திரன் இணைகளும் கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப் சர்மா - அனோஷ்கா பரிக், ப்ரனவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் - குஹோ கர்க் இணைகளும் தோல்வியைத் தழுவினர். மூன்றாவது நாள் ஆட்டத்தில் பி.வி.சிந்து களம் காண்கிறார்.