பேட்மின்டன் உலகச் சாம்பியன்ஷிப் - காலிறுதியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து! | Badminton World Championships: PV Sindhu, Saina Nehwal progress into quarterfinals

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (02/08/2018)

பேட்மின்டன் உலகச் சாம்பியன்ஷிப் - காலிறுதியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து!

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் முன்னேறினர். அதேநேரம், கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

பி.வி.சிந்து, சாய்னா நேவால்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் தென்கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியூன் மோதினர். காலிறுதிக்கும் முந்தைய ஆட்டம் என்பதால், காலிறுதிக்குள் நுழையப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பாக ஆடத்தொடங்கினார். அதன்படி முதல் செட்டில், 6-1 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து முன்னிலை வகித்தார். தொடர்ந்து 11-4 என செட் கணக்கில், தனது முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டார். அதன் பின்னர் 21-10 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டில் தென்கொரிய வீராங்கனை தாக்குப்பிடித்து விளையாடினார். ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 21-18 என்ற கணக்கில் 2வது செட்டைக் கைப்பற்றினார் பி.வி.சிந்து. இதன் மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். பி.வி.சிந்து காலிறுதியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவைச் சந்திக்கிறார். 

அதேபோல் மற்றொரு போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், 2013-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தாய்லாந்தின் இன்தானேனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா, 21-16 21-19 என்ற செட்களில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனும் இரண்டு முறை உலகச் சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரீனை அவர் காலிறுதியில் எதிர்கொள்கிறார்.