இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் `முதல் டெஸ்ட் சதம்’! சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி | Virat Kohli scores first test hundred in England

வெளியிடப்பட்ட நேரம்: 22:39 (02/08/2018)

கடைசி தொடர்பு:22:39 (02/08/2018)

இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் `முதல் டெஸ்ட் சதம்’! சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார். 

விராட் கோலி

Photo Credit: BCCI

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை முரளி விஜய் மற்றும் தவான் ஆகியோர் தொடங்கினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்க்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் ஆட்டமிழந்தார். அவர் 20 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முரளி விஜய் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். தவான் 26 ரன்களும், ராகுல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் குர்ரான், 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, விராட் கோலி - ரஹானே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து பந்துவீச்சை சிறிதுநேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடியை, ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் ரஹானே 15 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். இதனால், 50 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி, 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

விராட் கோலி

Photo Credit: ICC

அடுத்து களமிறங்கிய பாண்டியா, கேப்டன் கோலியுடன் இணைந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் நோக்கில் விளையாடினார். 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், டாம் குர்ரன் பந்துவீச்சில் பாண்டியா ஆட்டமிழந்தார். 52 பந்துகளைச் சந்தித்த பாண்டியா 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஷ்வின், 10 ரன்களிலும், ஷமி 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தநிலையில், 9வது விக்கெட்டுக்கு இஷாந்த் ஷர்மாவுடன் இணைந்து கேப்டன் கோலி விரைவாக ரன் சேர்க்க முற்பட்டார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. விராட் கோலி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் ஷர்மா ஆட்டமிழக்க ஆட்டத்தில் சிறிது பரபரப்புத் தொற்றிக் கொண்டது.  ஆனால், இங்கிலாந்து வீரர்களின் முயற்சியை முறியடித்த கோலி, அசத்தல் பவுண்டரியுடன், தனது 22வது சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி பதிவு செய்யும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். 100 பந்துகளில் அரை சதம் கடந்த  கோலி, 172 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி எப்படி விளையாடப் போகிறார் என்ற விமர்சனத்துக்குத் தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்து அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவுடன் இணைந்து கோலி 57  ரன்கள் சேர்த்தார். இறுதியாக 274 ரன்கள் எடுத்திருந்த போது 149 ரன்களுக்கு கோலி அவுட் ஆக முதல் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. இதில், இங்கிலாந்தை விட இந்திய அணி 13 ரன்கள் பின்தங்கியுள்ளது.


[X] Close

[X] Close