உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்து புதிய சாதனை! | Pv sindhu wins silver medal

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (05/08/2018)

கடைசி தொடர்பு:14:55 (05/08/2018)

 உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்து புதிய சாதனை!

சீனாவின் நான்ஜிங் நகரில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்கள் உலக பேட்மின்டன்  உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் கடைசி நாளான இன்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. 

சிந்து

முதல் செட்டின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய சிந்து ஒரு கட்டத்தில் 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். எனினும் அடுத்துச் சிறப்பாக விளையாடிய கரோலினா 8 புள்ளிகளில் 7 புள்ளிகளை கைபற்றி அதிரடி காட்டினார். இறுதியில் கரோலினா மரின் 21-19 என்ற புள்ளிகளில் முதல் செட்டை கைப்பற்றினார். 

இரண்டாவது செட்டில் கரோலினா மரின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் 5 புள்ளிகளை கைபற்றிய அவர், 11-2 என முன்னிலை வகித்தார். அதன் பின்னர்  தொடர்ந்து தனது சிறப்பான விளையாட்டைத் தொடர்ந்த அவர், இறுதியில் 21-10 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை எளிதாக கைப்பற்றினார். இதன் மூலம் சிந்து 19-21, 10-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார், கரோலினா மரின் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் சிந்து வெல்லும் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாகும், இதன் மூலம் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்,.