வரலாறு படைத்த இந்திய கால்பந்து அணி... அர்ஜென்டினாவை ஊதித் தள்ளியது! | India Stun Argentina 2-1 In U-20 COTIF CUP in spain

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (06/08/2018)

கடைசி தொடர்பு:18:29 (06/08/2018)

வரலாறு படைத்த இந்திய கால்பந்து அணி... அர்ஜென்டினாவை ஊதித் தள்ளியது!

ஸ்பெயினில் நடந்த COTIF  கோப்பை கால்பந்துத் தொடரில், 20 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந்தியா

வாலென்சியாவில் நடந்துவரும் இந்தத் தொடரில் நேற்று, இந்திய அணி 6 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய அணி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சியளித்தது.  தீபத் தங்க்ரி இந்த கோலை அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தில், 54-வது நிமிடத்தில் இந்திய முன்கள வீரர் ஜாதவ் பவுல் ஆடியதால், சிவப்பு அட்டை பெற்றார். இந்திய அணி, 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அர்ஜென்டினாவுக்கு இது சாதகமாக அமைந்தாலும், இந்திய வீரர்களின் தடுப்பாட்டத்தை உடைக்க அர்ஜென்டினா வீரர்களால் முடியவில்லை. கோல்கீப்பர் பிரபாசுகன் கில் அபாரமாகச் செயல்பட்டு, அர்ஜென்டினாவின் கோல் முயற்சிகளைக் 'கில் ' செய்தார். 68-வது நிமிடத்தில், இந்திய அணி இரண்டாவது கோலை திணித்தது. அன்வர் அலி அடித்த இந்த கோலால் இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கடைசிவரை போராடிய அர்ஜென்டினா, ஒரு கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பின்டோ, ''என்னால் இதை நம்பவே முடியவில்லை. தற்போது, உலகிலேயே அதிக மகிழ்ச்சியான இந்தியன் நான்தான். சர்வதேச கால்பந்தில் இந்திய கால்பந்துக்கு இந்த வெற்றி கௌரவத்தை உருவாக்கித் தந்துள்ளது ''என்றார். 

அம்மானில் நடந்த  16 வயதுக்கு உட்பட்ட ஆசிய அளவிலான கால்பந்துத் தொடரில், இந்திய அணி  ஆசிய சாம்பியன்  ஈராக் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இஞ்சுரி நேரத்தில் புவனேஷ் தலையால் முட்டி அடித்த கோலால் இந்தியா வெற்றிபெற்றது. எந்த வயதுக்கு உட்பட்ட இந்திய அணியும் இதுவரை ஈராக் அணியைத் தோற்கடித்ததில்லை. அந்த வகையில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க