இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் | My Instagram page is a fake one - Ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (07/08/2018)

கடைசி தொடர்பு:09:05 (07/08/2018)

இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல்

தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி

இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார்.  சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் மோசமானதாக இருந்தது. விராட்கோலி தவிர பிற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதுதொடர்பாக கங்குலி பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்று இருந்தது. அதில் ``கேப்டனாக இருந்தால் வெற்றி பெறும்போது வாழ்த்துவார்கள், தோல்வியடையும்போது விமர்சிப்பார்கள். பேட்ஸ்மென்களை நீக்கும்போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். முதல் தர கிரிக்கெட்டில் ரன் குவிப்பது எல்லாம் சர்வதேச தரத்துக்கு ஈடாகாது" எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தப்பதிவில் இருந்தது. இந்தப் பதிவும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து செய்திகளும் வெளியானது.

இந்நிலையில் கங்குலி தனது ட்விட்டர் பதிவில்,  ‘என் பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது. அதில் பதிவாகும் எந்தச் செய்தியையும் எந்தத் தகவலையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். 

@sganguly99 என்ற அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் கங்குலி குறித்த செய்திகள் படங்கள் பதிவாகின்றன. அந்தக்கணக்கை சுமார் 55 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை 219 பதிவுகள் அந்த கணக்கில் இருந்து பதியப்பட்டுள்ளது. கங்குலியின் ட்விட்டர் பதிவின் மூலம் இன்ஸ்டாகிராம் பதிவுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.