ஆசியப் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை! - அதிகாரபூர்வ அறிவிப்பு | Mirabai Chanu will not participate in the Asian games

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/08/2018)

கடைசி தொடர்பு:14:20 (07/08/2018)

ஆசியப் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை! - அதிகாரபூர்வ அறிவிப்பு

பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு ஆசியப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மீராபாய் சானு

கால்பந்து, குத்துச்சண்டை, பளுதூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குப் பெயர்போன மணிப்பூர் மாநிலத்தில் பிறந்தவர் மீராபாய் சானு. சிறுவயது முதலே தன்னை முழுமையாக விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்ட மீராபாய், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இதனால், இந்தியாவின் தங்க மங்கை என்ற பெருமையைப் பெற்றார். மேலும், 80 கிலோ, 84 கிலோ மற்றும் 86 கிலோ பிரிவில் கலந்துகொண்டு சாதனைப் படைத்தார். கடந்த 2017-ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேசப் போட்டியில், 48 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெற்றிபெற்று உலகச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். 

இந்த நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற உள்ள 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மீராபாய் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும், அதற்கான தகுதிச் சுற்றில் கலந்துகொண்டு தகுதிபெறவும், அவர் ஆசியப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. இந்தத் தகவலை, அவரின் பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்திருந்தார். இதை, உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் 
சேதேவ் யாதவ், `அடுத்த வாரம் இந்தோனேசியாவில் நடக்கவுள்ள ஆசியப் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக, அரசாங்கத்துக்கு அதிகாரபூர்வ தகவலை மெயில் மூலம் பிற்பகலுக்குமேல் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.