வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (07/08/2018)

கடைசி தொடர்பு:17:30 (07/08/2018)

பேட்ஸ்மேனின் முதல் சதத்தைத் தடுப்பதற்காக பந்துவீச்சாளர் செய்த செயல்!

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பேட்ஸ்மேன் சதமடிப்பதைத் தடுப்பதற்காகப் பந்துவீச்சாளர் செய்த செயல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கிரிக்கெட் மைதானம்

Photo Credit: Twitter/Minehead Cricket Club

மைன்ஹெட் கிரிக்கெட் கிளப் மற்றும் பர்னெல் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றின் செகண்ட் லெவன் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த பர்னெல் கிளப் அணி, 280 ரன்கள் சேர்த்தது. 45 ஓவர்களில் 281 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மைன்ஹெட் அணி, ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது களமிறங்கிய ஜே டேரல், சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், 95 ரன்களுடன் டேரல் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, பர்னெல் அணியின் பந்துவீச்சாளர் பவுண்டரி லைனை நோக்கி பந்தை வீசினார். இதனால், மைன்ஹெட் அணி வெற்றிபெற்றது. டேரல், சதமடிப்பதைத் தடுக்கவே பர்னெல் அணியின் பெயர்தெரியாத பந்துவீச்சாளர், இந்தச் செயலைச் செய்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்குப் பின்னர் நடந்த செயலுக்காக மைன்ஹெட் வீரர்கள் மற்றும் ஜே டேரலிடம் பர்னெல் அணியின் கேப்டன் மன்னிப்புக் கோரினார். மேலும், இந்த விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்படும் என பர்னெல் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2017ம் ஆண்டு, கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்போது, எல்வின் லீவிஸ் 33 பந்துகளில் 97 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது பந்துவீசிய கிரென் பொலார்ட், நோபாலாக வீசி போட்டியை முடித்துவைத்தார். இலங்கை அணிக்கெதிராகக் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது, இந்திய வீரர் சேவாக் 99 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது, நோ பாலாக பந்துவீசி, போட்டியை இலங்கை வீரர் சுராஜ் ரன்தீவ் முடித்துவைத்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுராஜுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.