வரலாற்றில் இரண்டே வெற்றி... லார்ட்ஸில் வெல்ல என்ன செய்யப்போகிறார் கோலி?! #ENGvIND | India Have Won Only Two Tests at Lords... Whats The Game Plan of Kohli?

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (09/08/2018)

கடைசி தொடர்பு:13:19 (09/08/2018)

வரலாற்றில் இரண்டே வெற்றி... லார்ட்ஸில் வெல்ல என்ன செய்யப்போகிறார் கோலி?! #ENGvIND

அஷ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதால் இரண்டாவது டெஸ்ட்டில் அதிக வலது கை பேட்ஸ்மேன்களோடு களம் இறங்க திட்டமிட்டிருக்கிறது இங்கிலாந்து.

வரலாற்றில் இரண்டே வெற்றி... லார்ட்ஸில் வெல்ல என்ன செய்யப்போகிறார் கோலி?! #ENGvIND

`கிரிக்கெட்டின் கேபிட்டல்’ என புகழப்படும் லண்டனின் லார்ட்ஸ் மைதானம் என்றாலே இந்தியாவுக்கு உதறல்தான்! இதுவரை லார்ட்ஸில் விளையாடியிருக்கும் 17 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி. 11 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணியும், 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியும்தான் இங்கே வெற்றிபெற்றிருக்கின்றன. இந்தமுறை ஏற்கெனவே 1-0 என தொடரில் பின்தங்கியிருக்கும் கோலியின் டீம் லார்ட்ஸில் வெல்ல மிகப்பெரிய யுத்தமே நடத்த வேண்டியிருக்கும். யுத்தத்துக்கு கோலி தயார்... ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள்?! 

கோலி


கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை  36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் வெற்றியோ, தோல்வியோ அடுத்தடுத்த போட்டிகளில் ஒரே அணியைக் கொண்டு கோலி விளையாடியதேயில்லை. 36 போட்டிகளிலும் வெவ்வேறு ப்ளேயிங் லெவனோடு களமிறங்கியிருக்கும் கோலி இன்றைய போட்டியிலும் வித்தியாச ப்ளேயிங் லெவனோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார்?
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் பெளலிங் சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் முழுமையாக கோட்டைவிட்டது இந்திய அணி. கோலியைத்தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிக மோசம். ஷிகர் தவான், ராகுல், ஹர்திக் பாண்டியா என இந்த மூவரின் இடம்தான் இந்திய அணியில் பிரச்னைக்குரியதாக இருக்கிறது. ஷிகர் தவான் இந்த இங்கிலாந்து சீரிஸில் சுத்தமாக ஃபார்மிலேயே இல்லை. எஸெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸிலுமே டக் அவுட் ஆன தவான், எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களும் எடுத்தார்.

 அதனால் இன்றைய ஆட்டத்தில் தவான் கழற்றிவிடப்படுவார் என்றே எதிர்பார்க்கலாம். தவானுக்கு பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக லோகேஷ் ராகுல் களமிறங்குவார். அதேபோல் ராகுலின் ஒன் டவுன் இடத்தில் சேத்தேஷ்வர் புஜாரா இடம்பெறுவார். 

 

கோலி ஜடேஜா

பாண்டியாவா... ஜடேஜாவா?!
ஹர்திக் பாண்டியாவை அணியில் ஆல்ரவுண்டராக எடுக்கிறார் கோலி. ஆனால், முதல் டெஸ்ட்டில் அவர் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அதனால் பாண்டியாவுக்கு பதிலாக இன்றைய டெஸ்ட்டில் இன்னொரு ஆல் ரவுண்டர் என்கிற முறையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 2014 லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜடேஜா. மூன்று விக்கெட்டுகள் எடுத்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ஜடேஜா.

அஷ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதால் இரண்டாவது டெஸ்ட்டில் அதிக வலது கை பேட்ஸ்மேன்களோடு களம் இறங்க திட்டமிட்டிருக்கிறது இங்கிலாந்து. 20 வயதேயான ஆலி போப் இன்று இங்கிலாந்து அணியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் வலது கை பேட்ஸ்மேன். இடது கை ஸ்பின்னரான ஜடேஜா வலது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க சரியான பெளலராக இருப்பார்.

7 விக்கெட் இஷாந்த்!
 அப்படியானால் இந்தியா அஷ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும். இஷாந்த் ஷர்மா, ஷமி, உமேஷ் யாதவ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். இதில் இஷாந்த் ஷர்மா 2014-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில்  7 விக்கெட்டுகள் எடுத்தவர். அதனால் லார்ட்ஸில் மிகப்பெரிய நம்பிக்கையுடன் களம் இறங்குவார் இஷாந்த்.

கோலி

பேட்டிங்கைப் பொறுத்தவரை முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, கோலி, அஜிங்கியா ரஹானே என்பதுதான் இந்தியாவின் டாப் ஆர்டர் லைன் அப்பாக இருக்கும். 2014-ம் ஆண்டு நடந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் அடித்தவர் ரஹானே. அதனால் ரஹானே இன்று முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பார். ரஹானேவுக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் இருப்பார். இவர் திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

கோலி

இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவன்!
முதல் டெஸ்ட் வெற்றியால் செம கூலாக இருக்கிறது இங்கிலாந்து. அலெஸ்டர் குக், கீட்டான் ஜெனிங்ஸ், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர் என்பதுதான் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் லைன் அப்பாக இருக்கும். ஆல் ரவுண்டராக கிறிஸ் வோக்ஸ் அணிக்குள் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆதில் ரஷித், சாம் கரண், ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பதுதான் இங்கிலாந்தின் பெளலிங் அட்டாக்காக இருக்கும். 

லார்ட்ஸ் பிட்ச்!
லார்ட்ஸ் மைதானமும் பெளலிங் பிட்ச்தான். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க ஸ்பின்னும் எடுபடும். யார் டாஸ் வென்றாலும் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தியா வெல்லுமா?!
இங்கிலாந்தை வெல்ல கோலிக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் எல்லா பேட்ஸ்மேன்களையும் ஃபார்முக்கு கொண்டுவருவதே. பெளலிங்கைப் பொறுத்தவரை அஷ்வின் முதல் இஷாந்த் வரை தங்களை அணிக்குள் பத்திரப்படுத்திக்கொள்வதற்காகவே கடுமையாக விளையாடுகிறார்கள். பேட்ஸ்மேன்கள்தான் தங்களின் பொறுப்பை இன்னும் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. முரளி விஜய், ராகுல், ரஹானே என டாப் ஆர்டர் ஃபார்முக்கு வந்தால் மட்டுமே லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெறும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்