396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்! | England declare on 396/7 in lord's test

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (12/08/2018)

கடைசி தொடர்பு:17:23 (12/08/2018)

396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்!

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடினர். இதனால் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. அதிகபட்சமாக ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் தடுமாறினாலும், விக்கெட் கீப்பர் பியர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியதுடன் அரை சதம் கடந்த நிலையில் பியர்ஸ்டோவ் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 357 எடுத்த நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது. அப்போது 40 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சாம் கரனை ஹ்ரிதிக் பாண்டியா அவுட் ஆக்கினார். இதனையடுத்து 396 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்களை விரைவாக அவுட் ஆக்க இங்கிலாந்து பௌலர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கலாம். ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் 7 ஓவர்களுக்கு உள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முரளி விஜய் இந்த முறையும் டக் அவுட் ஆகியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க