டி.என்.பி.எல் கிரிக்கெட் - கோப்பையை தட்டிச்சென்ற மதுரை பாந்தர்ஸ் | Madurai Panthers winning TNPL 2018 Title

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (13/08/2018)

கடைசி தொடர்பு:01:00 (13/08/2018)

டி.என்.பி.எல் கிரிக்கெட் - கோப்பையை தட்டிச்சென்ற மதுரை பாந்தர்ஸ்

டி.என்.பி.எல், டி- 20 கிரிக்கெட் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கிரிக்கெட்

டி.என்.பி.எல், டி- 20 கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 11-ம் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்றுப்போட்டிகள் முதல் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறின. தகுதிச் சுற்றுப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும்  மதுரை பாந்தர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 19.5 ஓவர்களில் அந்த அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 51 ரன்கள் எடுத்தார். மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4, லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மதுரை அணியின் வெற்றிக்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடரந்து களமிறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சற்குணம் முதல் பந்திலே ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்தடுத்து மேலும் இரண்டு விக்கெட்டுகளை திண்டுக்கல் அணி சாய்த்தது. இதனால் அந்த அணியின் கை சற்று ஓங்கியது. ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய மதுரை வீரர்கள் மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். இறுதியில் மதுரை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. மதுரை அணியில்  அருண் கார்த்திக் 75 குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.