ஆண்டர்சன் வேகம்... வோக்ஸ் அதிரடி -  இந்தியா சரண்டர்! | England win by an innings and 159 runs!

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (13/08/2018)

கடைசி தொடர்பு:09:39 (13/08/2018)

ஆண்டர்சன் வேகம்... வோக்ஸ் அதிரடி -  இந்தியா சரண்டர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

கிரிக்கெட்

Photo Credit: ICC

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலே முரளி விஜய் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து வீரர்கள், முதலில் தடுமாறினாலும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பெர்ஸ்டோவ்வின் பொறுப்பான ஆட்டத்தால், அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 7 விக்கெட்டுகளுக்கு 396 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களும், பெர்ஸ்டோவ் 93 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டின் துல்லியத் தாக்குதலில் இந்திய அணி நிலைகுலைந்துபோனது. முரளி விஜய், கோலி , புஜாரா, தினேஷ் கார்த்திக் என யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் சிறிதுநேரம் அறுதல் அளிக்கும் விதமாக ஆடினர். இறுதியில், இந்திய அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 0-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 18-ம் தேதி நடக்க உள்ளது.