வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (13/08/2018)

கடைசி தொடர்பு:08:00 (13/08/2018)

பழைமையான லார்ட்ஸ் மைதானத்தில் பெருமைக்குரிய சாதனை!

லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

ஆண்டர்சன்

Photo Credit: ICC

விராட்கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 396 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. 

 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள், சீட்டுக்கட்டுபோல சரிந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டின் துல்லிய தாக்குதலில் இந்திய அணி நிலைகுலைந்துபோனது. இறுதியில், இந்திய அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தத் தொடரில், இரண்டு இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும், ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜய் விக்கெட்டைக் கைப்பற்றியது, லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன்  கைப்பற்றிய 100-வது விக்கெட்டாக அமைந்தது. இதுவரை எந்த பந்துவீச்சாளரும் லார்ட்ஸ் மைதானத்தில் 100-விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில்லை. இதன்மூலம், பழைமையான லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் ஆண்டர்சன். இரண்டாவது டெஸ்டில் ஆண்டர்சன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ஆண்டர்சன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார்.