வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (15/08/2018)

கடைசி தொடர்பு:10:56 (15/08/2018)

இங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்! #10yearsOfKohli

பத்து ஆண்டுகளில் பதினேழாயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்கள், 57 சதங்கள் என 22 யார்டுகளுக்கு நடுவே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் விராட் கோலி.

இங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்! #10yearsOfKohli

ஆகஸ்ட் 18, 2008. இந்தியா - இலங்கை ஒருநாள் தொடரின் முதல் போட்டி. சச்சின் அந்த ஒருநாள் தொடரில் ஆடவில்லை. அந்த முதல் போட்டியில் சேவாக் ஆடவில்லை. கம்பீர் மட்டுமே பிரதான ஓப்பனர். அவரோடு ஓப்பனிங்கில் கைகோக்கப்போவது யார் என்ற கேள்வி. அது வெறும் ஓப்பனிங் ஸ்லாட் இல்லை. சச்சினின், சேவாக்கின் ஸ்லாட். அந்த இடத்தில், அவர்களுக்குப் பதிலாக அன்று களமிறங்கினார் 19 வயது விராட் கோலி. அன்று அவர்களுக்கு மாற்று வீரராகக் களமிறங்கியவர், இன்று இந்திய அணியை அவர்கள் இடத்தில் நின்று சுமந்துகொண்டிருக்கிறார். இந்த வாரத்தோடு, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் கிங் கோலி!

பத்து ஆண்டுகளில் பதினேழாயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்கள், 57 சதங்கள் என 22 யார்டுகளுக்கு நடுவே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. அவரது இந்த 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றிப் பேச நிறையவே இருக்கிறது. கோலியின் பேட்டிங் டெக்னிக், ஸ்டைல், கேப்டன்சி, ஆடிட்யூட் என எக்கச்சக்க விஷயங்கள் நாம் அலசப் போகிறோம். ஆனால், முதலில் எங்கிருந்து தொடங்குவது. ஒவ்வொரு போட்டியிலும் ரன்மழை பொழிந்துகொண்டிருக்கும் அவரது பேட்டில் இருந்தே தொடங்குவோம்!

கோலி

கோலியின் பேட் முதல் ரக இங்கிலீஷ் வில்லோவால் உருவானது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்கள் இரண்டு ரகம் தான் : இங்கிலீஷ் வில்லோ, காஷ்மீர் வில்லோ. இங்கிலீஷ் வில்லோ மிகவும் இலகுவாகவும், மென்மையாகவும் இருக்கும். காஸ்மீர் வில்லோக்கள் அதிர்வுகளைத் தாங்குவதில் பெஸ்ட். அதிக நாள்கள் தாங்கும். எடை குறைந்த பேட்களையே விரும்புவதால் கோலி இங்கிலீஷ் வில்லோதான் பயன்படுத்துகிறார்.

பொதுவாக பேட்டின் ஹேண்டில்கள் பிரம்பால் செய்யப்பட்டிருக்கும். பந்து பேட்டில் படும்போது, அந்த பல்ஸ், மரத்தின் வழியே பாயும் என்பதால், ஹேண்டில்கள் பேட் செய்யப்படும் வில்லோக்களிலிருந்து செய்யப்படாமல் பிரம்பால் செய்யப்படுகின்றன. விராட்டின் பேட்டில் பயன்படுத்தப்படும் ஹேண்டில்கள் `9 Piece Cane' வகை. 

கோலி பயன்படுத்துவது எடை குறைவான `லைட் வெயிட்' பேட்டுகள்தாம். வலுவான பாட்டம் ஹேண்ட் கொண்ட வீரர்கள் கவர் டிரைவ் அடிப்பது கடினம். ஆனால், கோலி கவர் டிரைவ்களில் கில்லி. தன் பாட்டம் ஹேண்ட் பிரச்னையைச் சரிசெய்வதற்காகவே எடை குறைவான பேட்டைப் பயன்படுத்துகிறார் விராட். அதனால், கவர் டிரைவ்களுக்கும், ஃபிளிக் ஷாட்களுக்கும் பேட்டை ஃப்ளெக்சிபிளாகப் பயன்படுத்த முடியும். பேட்டின் எடையைப் பொறுத்தவரை, இந்த எடைதான் இருக்கவேண்டும் என்று எந்த விதிகளும் கிடையாது. கோலியின் பேட் எடை 1.1 முதல் 1.23 கிலோ வரைதான்!

 

அதேபோல் பேட்டின் அடர்த்தி மிகவும் முக்கியமானது. பேட்டின் அடர்த்தி எந்த இடத்திலும் 67 மில்லி மீட்டரைத் தாண்டக் கூடாது. அதேபோல் முனைகளில் 40 மில்லி மீட்டரைத் தாண்டக் கூடாது. கோலியின் பேட் நல்ல அடர்த்தியுள்ளது. அவர் பேட்டின் முனை 38 முதல் 40 மில்லிமீட்டர் வரை அடர்த்தியுடையவை. அதுமட்டுமல்லாமல் `curved blade' ரக முனைகள்தாம் பயன்படுத்துகிறார். பேட் வளைந்து இருப்பதால், அது பேட்டின் எடையை பேலன்ஸ் செய்ய உதவிகரமாக இருக்கும். 

பேட்டின் மிகமுக்கிய அம்சம் `grain'. பேட்டில் உள்ள கோடுகள், வில்லோவின் வயதைக் குறிப்பவை. கோடுகள் அதிகமாக இருப்பது, மிகவும் பழைய மரத்திலிருந்து செய்யப்பட்ட பேட் என்பதை உணர்த்தும். மரத்தின் ஆயுள் அதிகமாக இருந்தால், அது பேட்டின் தரத்தை அதிகரிக்கும். பொதுவாக பேட்கள் 8 முதல் 12 grain கொண்டிருக்கும். விராட்டின் பேட்கள் பெரும்பாலும் 12 grain கொண்டவையாகவே இருக்கும்.

தன் பேட்டில் இருக்கும் MRF லோகோவுக்காக 8 கோடிகள் வாங்குகிறார். விராட் பயன்படுத்தும் MRF Genius எடிசன் பேட்கள் வெளியே 17,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.


டிரெண்டிங் @ விகடன்