சாதிப்பார்களா இந்திய வீரர்கள்? - இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தோனேசியாவில் இன்று தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை தொடங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம் என ஆசிய கண்டத்தைச்  சேர்ந்த 45 நாடுகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. இன்று மாலை 5.30 மணிக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்குகிறது. இதனால் ஜகார்தா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழா முடிந்த பின்பு நாளை முதல் போட்டிகள் நடைபெறும். 40 விளையாட்டுகள் 462 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட உள்ளது. முன்னதாக இன்று நடைபெறும் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு இந்தமுறை, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுகளில் கோலோச்சி வரும் இந்தியா இந்த முறையும் பதக்க வேட்டையுடன் களமிறங்கவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. அதன்படி, 2010ல் 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றது. இந்தச் சாதனையை இந்தமுறை இந்திய வீரர்கள் முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா, பிவி சிந்து போன்ற முன்னணி வீரர்கள் உட்பட மொத்தம் 542 இந்திய வீரர்கள் இன்று தொடங்கவுள்ள இத்தொடரில் பங்கேற்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!