வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (18/08/2018)

கடைசி தொடர்பு:09:38 (18/08/2018)

`நான் கொஞ்சம் வருத்தமாக உள்ளேன்' - பழைய நினைவுகளைப் பகிரும் சானியா மிர்சா!

இன்று தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை தொடங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம் என ஆசிய கண்டத்தைச்  சேர்ந்த 45 நாடுகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. இதில், பேட்மின்டன், ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல், பேட்மின்டன், டென்னிஸ் என பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா, பிவி சிந்து போன்ற முன்னணி வீரர்கள் உட்பட மொத்தம் 542 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். இதனால் விளையாட்டு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக உள்ளதால் முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. 

இதுகுறித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வாங்கிய பதக்கங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``முதல்முறையாக 2002–ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். அன்று முதல் தொடர்ந்து இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடியுள்ளேன். ஆனால், முதல்முறையாக இப்போதுதான் எனது தேசத்துக்காக ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாமல் போய் உள்ளது. இதனால் கொஞ்சம் வருத்தமாக உள்ளேன். என் கண் முன் பழைய நினைவுகள் வந்து செல்கின்றன. ஆனால், நான் பதக்கம் வென்ற புகைப்படத்தைப் பார்க்கும்போது, மிகப்பெரிய போட்டி நடக்கும்போது நான் வீட்டில் இருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது. எனினும் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தடகள வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். குறிப்பாக டென்னிஸ் டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க