ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்தோனேஷியாவில் நேற்று தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். 

ஆசிய விளையாட்டுப் போட்டி

இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் அபூர்வி சந்தேலா மற்றும் ரவிக் குமார் ஜோடி கலந்துகொண்டது. 10 மீட்டர் தூரம் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில், ஆட்டம் தொடக்கம் முதலே முனைப்பு காட்டிய இந்த ஜோடி, 835.3 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 429.9 புள்ளிகள் பெற்று இந்த ஜோடி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. 

இதனால், ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்த பெருமை அபூர்வி சந்தேலா மற்றும் ரவிக் குமார் ஜோடிக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஆசியப் போட்டியின் முதல்நாள் துவக்கமே சிறப்பாக உள்ளது. துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் அபூர்வி சந்தேலா மற்றும் ரவிக் குமார் ஜோடி சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர்' எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!