வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:07:46 (20/08/2018)

ஆசிய விளையாட்டுப் போட்டி - முதல் தங்கத்தைப் பதிவு செய்தது இந்தியா!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதல் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி

18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிகள் கோலாகலமாக  நடைபெற்று வருகின்றன. இரண்டாவது நாளான இன்று, இந்தியா சார்பில் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். அதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, இறுதிப்போட்டியில், பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகா டனியை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் பஜ்ரங் புனியா 6-4 என முன்னிலைப் பெற்றார்.

தங்கம்

 

அதைத்தொடர்ந்து இருவரும் 6-6 என சமநிலைப்பெற்றனர். பின்னர் 8-6 என்ற முன்னிலைப்பெற்ற புனியா, இறுதியில் 11-8 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை தோற்கடித்து ஆசியப்போட்டிகளில் முதல் தங்கத்தைப் பதிவு செய்தார். இந்தோனேசியா ஆசியக்கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கம் என்பதால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.