தவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2-ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா! | At the end of day 2 in third test India in commanding position

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (20/08/2018)

கடைசி தொடர்பு:08:08 (20/08/2018)

தவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2-ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா -இந்தியா

Photo: Twitter/ICC

இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற, மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்யப் பணித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 97 ரன்கள் எடுத்தார். 

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓரளவுக்குச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர் குக் மற்றும் ஜென்னிங்ஸ். ஆனால், அதன் பின்னர் வந்தவர்கள் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 

தவான்
 

Photo: Twitter/ICC

அதன் பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இரண்டாவது நாளில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு  சாதகமாக இருந்தாலும் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் கவனமுடன் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ராகுல் 33 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல் - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடி அரைசதம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தவான், 44 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா (33) மற்றும் கேப்டன் கோலி (8) ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியைவிட 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது.