வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (20/08/2018)

கடைசி தொடர்பு:11:47 (20/08/2018)

சச்சினின் சாதனைகளை கோலி எப்போது முறியடிப்பார்... நம்பர்ஸ் சொல்லும் விடை! #10YearsOfKingKohli

``நான் யாரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேனோ அவரோடு என்னை ஒப்பிடுகிறீர்கள். என்னோடு ஒப்பிட்டு அவருக்கு அவமரியாதை ஏற்படுத்திவிடாதீர்கள்" என்று கோலியே ஒருமுறை சொல்லியிருக்கிறார். 

சச்சினின் சாதனைகளை கோலி எப்போது முறியடிப்பார்... நம்பர்ஸ் சொல்லும் விடை! #10YearsOfKingKohli

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 18-ம் தேதி மாற்று ஓப்பனராக இந்திய அணிக்கு அறிமுகமானார் விராட் கோலி. இன்று... இந்திய கிரிக்கெட்டின் முகம் அவர்தான். இந்த 10 ஆண்டுகளில் அவர் கண்டிருப்பது அசுர வளர்ச்சி. சச்சினை ரோல் மாடலாகக் கொண்டிருந்தவர், அவரது இடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கினார். பின்னர் அவரோடு இணைந்து விளையாடினார். அவரை தோளில் சுமந்தார். இப்போது அவர் சுமந்த அணியையும் சுமந்துகொண்டிருக்கிறார். சச்சினோடு இணைந்தும் பேசப்படுகிறார். 

சச்சின் - அக்ரம், மெக்ராத், வார்னே போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து விளையாடியவர். அன்றைய கிரிக்கெட் பந்துவீச்சிலும் பல ஜாம்பவான்களைக் கொண்டிருந்தது. இன்று அப்படியல்ல. கிரிக்கெட் முழுக்கமுழுக்க பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக மாறிவிட்டது. இங்கு யார் வேண்டுமானாலும் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கலாம். அதனால் இன்றைய தலைமுறை வீரர்களை, முந்தைய தலைமுறை வீரர்களை ஒப்பிடுவது அபத்தம். ``நான் யாரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேனோ அவரோடு என்னை ஒப்பிடுகிறீர்கள். என்னோடு ஒப்பிட்டு அவருக்கு அவமரியாதை ஏற்படுத்திவிடாதீர்கள்" என்று கோலியே ஒருமுறை சொல்லியிருக்கிறார். 

கோலி

கோலி இந்த தலைமுறை வீரர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். தொடர்ந்து ரன்கள் குவிப்பதில் யாரும் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறார். சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் என உடைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அதற்காக `கோலி சச்சினுக்கு நிகர்' என்றோ, `சச்சினைவிட பெஸ்ட்' என்றோ சொல்வது முட்டாள்தனம். இருந்தாலும், சாதனைகள் எல்லோரும் முறியடிக்கக்கூடியதே. சச்சின், முரளிதரன், பிராட்மேன் என யாருடைய சாதனையை யார் வேண்டுமானாலும் முறியடிக்கலாம். அதுவும் கோலி ஒவ்வொரு சதம் அடிக்கும்போதும் ஒரு சாதனை முறியடிக்கப்படுகிறது. 

அந்த வகையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், சச்சினின் ரன் மற்றும் செஞ்சுரி சாதனைகளை கோலி எப்போது, எந்த போட்டியில் முறியடிப்பார் என்று ஒரு கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்கு போட்டுப் பார்த்தோம். சச்சினின் சராசரி, கோலியின் சராசரி, இன்னிங்ஸ் பெர் மேட்ச், செஞ்சுரி பெர் இன்னிங்ஸ் என எத்தனையோ criteria வரையறுக்கப்பட்டு அதன் மூலம் இதைக் கணித்திருக்கிறோம். இந்த 2 ஆண்டுகளில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கோலி, இந்த 2 ஆண்டு (2017,2018) வேகத்திலேயே பயணித்தால் எப்போது சச்சினை முந்துவார்?

இன்னிங்ஸ் பெர் மேட்ச் 

டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே விளையாடுவதில்லை. அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும், விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் பேட்டிங் செய்வதில்லை. சில போட்டிகள் மழையால் பாதியில் கைவிடப்படும். சில போட்டிகளில் எதிரணி இன்னிங்ஸ் தோல்வியடையும்போது, ஓப்பனிங் பேட்ஸ்மேன்களே மேட்சை முடிக்கும்போதெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கும் இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை குறையும். உதாரணமாக கோலியையே எடுத்துக்கொள்ளலாம். கடந்த 2 ஆண்டுகளில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பொதுவாகப் பார்த்தால் 30 இன்னிங்ஸ். ஆனால், அவர் பேட்டிங் செய்துள்ளது 26 இன்னிங்ஸ்கள்தாம். அதனால் எத்தனை போட்டிகளில் கோலி இலக்கை எட்டுவார் என்று கணக்கிடும் முன், எத்தனை இன்னிங்ஸ் என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. 

 

டெஸ்ட் போட்டிகளில் கோலி, சச்சினின் 15,921 ரன்களை முந்த இன்னும் 10,128 ரன்கள் அடிக்கவேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் அவர் கொண்டுள்ள 66.04 என்ற சராசரியில் அந்த இலக்கை எட்ட அவருக்கு அவருக்கு இன்னும் 154 இன்னிங்ஸ்கள் தேவைப்படும். அதை அவர் எத்தனை போட்டிகளில் விளையாடியிருப்பார். இந்த இடத்தில்தான் இன்னிங்ஸ் பெர் மேட்ச்சின் தேவை ஏற்படுகிறது. இந்த 2 ஆண்டுகளில் அவர் விளையாடியுள்ள இன்னிங்ஸ்களை (26), போட்டியால் வகுத்தால் (15), கோலி ஒரு போட்டிக்கு சராசரியாக 1.73 இன்னிங்ஸ்கள் விளையாடியிருக்கிறார். சச்சினை முந்த தேவைப்படும் இன்னிங்ஸ்களை (154) இன்னிங்ஸ் பெர் மேட்ச்சால் (1.73) வகுக்கும்போது அவருக்கு எத்தனை போட்டிகள் தேவை என்பதைக் கணக்கிட்டுவிட முடியும். டெஸ்ட் போட்டிகளில் இந்த 2 ஆண்டு வேகத்திலேயே கோலி விளையாடினால், சச்சினின் ரன் சாதனையை இன்னும் 89 போட்டிகளில் முடித்துவிடுவார். அதாவது தன் 158-வது டெஸ்ட் போட்டியில்!

 

செஞ்சுரி பெர் மேட்ச்

சரி, சச்சினின் 51 சதங்களை விராட் எப்போது முறியடிப்பார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிவரை 22 சதங்கள் அடித்துள்ள கேப்டன் கோலி, சச்சினின் சாதனையை முந்த இன்னும் 30 சதங்கள் தேவை. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 7 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 26 இன்னிங்ஸ்களில் 7 சதம் எனில், ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் சராசரியாக 0.27 சதம். இந்த விகிதத்தில் அவர் இன்னும் 30 சதங்கள் அடிக்க 112 இன்னிங்ஸ்கள் தேவை. இந்த இடத்திலும் இன்னிங்ஸ் பெர் மேட்ச் criteria-வை புகுத்தினால், 30 சதங்கள் அடிக்க இன்னும் அவருக்கு 65 போட்டிகள் தேவை. அதாவது தன் 133-வது போட்டியில். 

கோலி

இதேபோல்தான் ஒருநாள் போட்டிகளுக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் மிரட்டலாக ஆடிவரும் விராட், 35 போட்டிகளில் 2,209 ரன்கள் குவித்துள்ளார். 88.36 என்ற சராசரியில் விளையாடினால், சச்சினின் 18,426 ரன்கள் என்ற சாதனையை இன்னும் 98 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்துவிடுவார். 2016, 2017-ம் ஆண்டுகளில், ஒருநாள் போட்டிகளில் அவரது இன்னிங்ஸ் பெர் மேட்ச் 1 என்பதால் அவருக்குத் தேவைப்படும் போட்டிகளின் எண்ணிக்கையும் 98 தான். விராட் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் ரன்களை தன் 309-வது போட்டியில் முறியடிக்கக்கூடும். 

இந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வோர் ஒருநாள் இன்னிங்ஸ்களுக்கும் 0.26 சதம் அடித்துள்ளார் விராட். அதாவது 35 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள். இந்த விகிதத்தில் அவர் 50 சதங்கள் அடிக்க இன்னும் 58 போட்டிகள் போதும். அதாவது 58 ஆட்டங்கள். தன் 269-வது போட்டியிலேயே அவரால் சச்சினின் சத சாதனையை ஒருநாள் போட்டிகளில் முறியடிக்கக்கூடும். 

கோலி

விராட் கடந்த 2 ஆண்டு ஃபார்மில் விளையாடினால்,  அந்தந்த ஃபார்மட்களில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்று கணித்திருக்கிறோம். ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவரால் இதே ஃபார்மில் விளையாட முடியும். இறுதிக்கட்டத்தில் சச்சினின் வேகமே குறைந்ததே. மிஞ்சிப்போனால் கோலியால் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் இதே வேகத்தில் ஆட முடியும். அதன்பின் நிச்சயம் வேகம் குறையும். இதையும் கவனத்தில் கொள்வது அவசியம். அதனால் இதுவரையிலான கோலியின் வாழ்நாள் சராசரி, இன்னிங்ஸ் பெர் மேட்ச், செஞ்சுரி பெர் மேட்ச் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கீடுகளின் முழு விவரம் Interactive card-ல் தெரியும்.


டிரெண்டிங் @ விகடன்