வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (21/08/2018)

கடைசி தொடர்பு:08:38 (21/08/2018)

காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது!: வினேஷ் போகத்

‘காயங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும் அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமான ஒன்று’ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகத்தின் வார்த்தைகள்.

மல்யுத்தம்

ரியோ ஒலிம்பிக்கில் காயத்தால் வெளியேறிய வீராங்கனை தன் கடின உழைப்பால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்.18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் மல்யுத்தப்போட்டியில் ஃப்ரி ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி இரி இறுதிப்போட்டியில் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த யூகியை 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் வினேஷ் போகத். இதன் மூலம் இந்தியாவின் பதக்கப்பட்டியல் 5ஆக உயர்ந்தது. மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். சாதாரணமாக இந்த வெற்றியை போகத் பதிவு செய்துவிடவில்லை.


வெற்றி குறித்து பேசிய வினேஷ் போகத்,  ``தங்கம் வெல்வதை எனது இலக்காகக் கொண்டிருந்தேன். ஆசிய அளவில் நான் 3-4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளேன். அதனால் இன்று தங்கம் வென்றாக வேண்டும் எனத் தீர்க்கமாக இருந்தேன். எனது உடலும் அதற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. நான் நன்றாகப் பயிற்சி பெற்றிருந்தேன். கடவுளும் எனக்கு இரக்கம் காட்டினார். காயங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமான ஒன்று. விளையாட்டு வீரர்கள் காயங்களுக்குப் பின்னர்தான் வலுவாகக் காணப்படுகிறார்கள் எனச் சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உண்மை எனத் தற்போது நினைக்கிறேன்” என்றார்.