ஆக்ரோஷமான ஸ்டூவர்ட் பிராட்...  அபராதம் விதித்த ஐ.சி.சி

விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி

Photo Credit: ICC

விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி இங்கிலாந்தின் வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், ஐ.சி.சி நடத்தை விதிக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி போட்டிக் கட்டணத்திலிருந்து அவருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸின் 92-வது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அவரது பந்துவீச்சில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது பேட்ஸ்மேன் அருகில் சென்ற பிராட் அவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். இதன் மூலம் அவர் ஐ.சி.சி விதிமுறைகளை மீறியதாகவும் அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!