வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/08/2018)

கடைசி தொடர்பு:15:40 (22/08/2018)

மூன்று முறை கம்பேக் கொடுத்து வென்ற சர்னோபாத் - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்!

கடைசி சுற்று... 5 வாய்ப்புகளில் எதிராளியைவிட 2 புள்ளிகளாவது அதிகம் பெறவேண்டும். ரொம்பவுமே கடினமான விஷயம்தான். ஆனால், எல்லாம் அவருக்கு சாதகமாக நடந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார், இந்தியாவின் ராஹி சர்னோபாத். கடைசிச் சுற்றின்போது 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தவர், 3 முறை (கடைசிச் சுற்று, 2 டை பிரேக்கர்) போராடி தங்கம் வென்றார். 

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, அனைவரின் கவனமும் மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் மீதுதான் இருந்தது. 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 593 புள்ளிகள் பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை படைத்து, ஃபைனலுக்குள் நுழைந்தார் 16 வயது மனு. காமன்வெல்த் தொடரில் பட்டையைக் கிளப்பியவர், இந்தச் செயல்பாட்டால் மேலும் கவனம் பெற்றார். தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளுடன் ஏழாம் இடம் பிடித்து ஃபைனலுக்குள் நுழைந்தார் சர்னோபாத். 

சர்னோபாத்

8 வீராங்கனைகள் மோதும் ஃபைனல், 10 சுற்றுகளாக நடக்கும். ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் 5 முறை இலக்கை சுடவேண்டும். ஒவ்வொரு சரியான ஷூட்டுக்கும் 1 புள்ளி. நான்கு சுற்றுகளின் முடிவில் கடைசி இடத்தில் இருப்பவர் வெளியேறிவிட வேண்டும். ஐந்தாவது சுற்று 7 பேருடன் தொடங்கும். அந்தச் சுற்றின் முடிவில், கடைசி இடத்தில் இருப்பவர் வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் ஒரு ஆள் வெளியேற வேண்டும். 10-வது சுற்றில் முதலிரு இடத்தில் இருப்பவர்கள் மட்டும் மோதுவார்கள். 

ஃபைனலின் தொடக்கத்திலிருந்தே சர்னோபாத் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். முதல் 2 சுற்றுகளிலும் 5 முறையுமே இலக்கை சரியாகக் குறிவைத்தார். ஆனால், மனு ரொம்பவே சறுக்கினார். முதல் சுற்றில் 3 புள்ளிகள்தான். இரண்டாவது சுற்றிலும் அவ்வளவே. சறுக்கல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆறாவது சுற்றின் முடிவில், 16 புள்ளிகள் பெற்றிருந்த மனு வெளியேற நேரிட்டது. ஒரு கட்டத்தில் இரண்டாம் இடத்திலிருந்த தாய்லாந்து வீராங்கனை யாங்பாய்பூனைவிட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்த சர்னோபாத், 7-வது சுற்றுக்கு மேல் கொஞ்சம் சறுக்கினார். 9-வது சுற்றின் முடிவில் 34-32 எனப் பின்தங்கவும் நேரிட்டது.

சர்னோபாத்

கடைசிச் சுற்று... 5 வாய்ப்புகளில் எதிராளியைவிட 2 புள்ளிகளாவது அதிகம் பெறவேண்டும். ரொம்பவுமே கடினமான விஷயம்தான். ஆனால், எல்லாம் அவருக்குச் சாதகமாக நடந்தது. அந்தக் கடைசிச் சுற்றில், ராஹி சர்னோபாத் எடுத்ததோ 2 புள்ளிகள்தான். ஆனால், கடைசிச் சுற்றின் 5 வாய்ப்புகளையுமே வீணடித்தார் யாங்பாய்பூன். இப்போது 34-34. இன்னும் தங்கத்துக்கான வாய்ப்பு நீடிக்கிறது. டை பிரேக்கரில் வெற்றிபெற முடியும். முதல் டை பிரேக்கரும் சமமாய் முடிய, மீண்டும் டை பிரேக். இம்முறை கிடைத்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொண்டார், ராஹி. 3-2 என அந்த ஷூட் அவுட்டை வென்று தங்கத்தையும் கைப்பற்றினார். 

இது, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெல்லும் 4-வது தங்கம். மொத்தமாக 10-வது பதக்கம். இந்தப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தென் கொரிய வீராங்கனை கிம் மின்ஜுங் வென்றார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான ராஹி சர்னோபாத், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 2010, 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கமும், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.