ஐந்தாவது தங்கம் வென்றது இந்தியா! படகோட்டுதலில் 3 பதக்கங்கள்! #AsianGames2018

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய படகோட்டுதல் அணி சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் 'Quadruple sculls' போட்டியில் சவர்ன் சிங், தத்து பொக்கானல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் அடங்கிய அணி 6:17.13 என்ற நேரத்தில் இலக்கை அடைந்து தங்கம் வென்றது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் ஐந்தாவது தங்கம் இது.

இந்த தங்கம் மட்டுமல்லாமல் படகோட்டுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளது. லைட்வெயிட் ஸ்கல்ஸ் பிரிவின் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் சௌஹான் வெண்கலம் வென்றார். அதேபோல் லைட்வெயிட் ஸ்கல்ஸ் இரட்டையரில் ரோஹித் குமார் - பகவான் சிங் இணை மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை 3 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது இந்திய படகோட்டுதல் அணி.

அதேசமயம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ஹீனா சித்து, மனு பாகர் இருவரும் முன்னேறியுள்ளனர். இன்று காலை நடந்த தகுதிச் சுற்றில் மனு பாகர் 574 புள்ளிகள் (94, 98, 96, 97, 95, 94) பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தொடக்கத்தில் கொஞ்சம் சறுக்கிய ஹீனா 571 (94, 94, 96, 93, 99, 95) புள்ளிகளுடன் ஏழாம் இடம் பெற்று ஃபைனலுக்கு முன்னேறினார். ஐந்தாவது சீரிஸில் அவர் 99 புள்ளிகள் எடுக்காமல் இருந்திருந்தால் தகுதிச் சுற்றோடு வெளியேற நேர்ந்திருக்கும்.

இன்றைய நாள் இந்தியாவுக்கு தங்கத்தோடு மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. ஹீனா, மனு இருவருமே தங்கம் வெல்லத் தகுதியானவர்கள் என்பதால் இந்தியாவுக்கு இன்று மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!