ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளரான இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார். 

லால்சந்த் ராஜ்புத்

Photo Credit: Twitter/@ZimCricketv

இந்தச் செய்திய ட்விட்டரில் அதிகாரபூர்வாமாக அறிவித்துள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், ``ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் நிர்வாகியான அவர், வெற்றிகரமான பயிற்சியாளராக சர்வதேச அளவில் அறியப்பட்டவர்’’ என்று பதிவிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த், கடந்த மே மாதத்தில் ஜிம்பாப்வே அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் மேனேஜராக இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு. அதேபோல், லால்சந்த் பயிற்சியின் கீழ்தான், ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அந்த அணி 6 தொடர்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் அணியின் பயிற்சியாளராகவும் லான்சந்த் பதவி வகித்தார். 

ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள லால்சந்த் ராஜ்புத், ``எனது பயிற்சி முறைகள் மீது நம்பிக்கை வைத்து எனக்குப் பொறுப்பு அளித்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புதிய பொறுப்பின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறேன். ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். அந்த ஒப்பந்தம் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!