`4 ஓவர்கள்; ஒரு ரன், 2 விக்கெட்டுகள்!’ - டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த முகமது இர்ஃபான்

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பார்படாஸ் டிரிடென்ட்ஸ் அணி வீரர் முகமது இர்ஃபான், 4 ஓவர்கள் பந்துவீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். டி20 வரலாற்றில் இது புதிய சாதனையாகும். 

முகமது இர்ஃபான்

 

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பார்படாஸ் டிரிடென்ட்ஸ் மற்றும் செயிண்ட் கிட்டீஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய பார்படாஸ் வீரர் முகமது இர்ஃபான், ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். டி20 கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மேன்களின் கேம் என்ற நிலை இருந்து வருகிறது. அதுவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், உலக அளவில் நடைபெறும் டி20 தொடர்களில் ரன்குவிப்புக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்களது சொந்தமண்ணில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்ஃபான் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.

இர்ஃபான்

டி20 வரலாற்றில் மிகவும் சிக்கனமான ஸ்பெல் (Most Economical spell) என்ற சாதனையை இர்ஃபான் தன்வசமாக்கியிருக்கிறார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் எல்வின் லீவிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் இர்ஃபான் வீழ்த்தினார். அவர் வீசிய முதல் 23 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. கடைசிப் பந்தில் மட்டும் ஒரு ரன் கொடுத்தார். இருப்பினும் இர்பானின் அணியான பார்படாஸ் டிரிடென்ட்ஸ் தோல்வியையே சந்தித்தது. அந்த அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை செயிண்ட் கிட்டீஸ் அணி, 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே எட்டியது. 

சாதனை குறித்து பேசிய முகமது இர்ஃபான், ரன் குவிப்புக்குப் பெயர்போன டி20 போட்டிகளில் இந்த சாதனையப் படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியில் எங்களது அணி வெற்றி பெற்றிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த இர்ஃபான், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டு தேசிய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!