வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/08/2018)

கடைசி தொடர்பு:10:54 (27/08/2018)

மூன்றாவதாக வந்த தமிழக வீரர் - தடத்துக்கு வெளியே கால்வைத்ததால் பதக்கத்தை இழந்த சோகம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் அறிவிக்கப்பட்ட தமிழக வீரர் லட்சுமணனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்றுவருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று, தடகளத்தில் 10,000 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வீரர் லக்‌ஷ்மணனுடன் சேர்ந்து 12 பேர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில், பஹ்ரைன் வீரர் ஹசன் சானி, 28 நிமிடம் 35:54 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென், 29 நிமிடம் 00:29 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மூன்றாவதாக வந்த தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன், வெண்கலப்பதக்கம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்துக்கு வெளியே கால் வைத்ததால், தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, நான்காவதாக வந்த சீன வீரர் சாங்காங் ஷாவோவுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.