ஜகார்த்தாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

சிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார், அவினாசியைச் சேர்ந்த தருண். ஜகார்த்தாவில் வென்ற வெள்ளிப்பதக்கத்தை தன் தாய் பூங்கொடிக்கு அர்ப்பணிப்பதாக தருண் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  தருண் 4- ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே, அவரின் தந்தை அய்யாசாமி இறந்துவிட்டார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த தாயார் பூங்கொடி, தருணையும் அவரின் தங்கை சத்யாவையும் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவைத்துள்ளார்.  ஆசிரியையாகப் பணிபுரியும் பூங்கொடிக்கு மாதச் சம்பளமாக ரூ. 14,000 கிடைக்கிறது. ''என் தாயார் எனக்காக பல தியாகங்களைச் செய்துள்ளார். எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. என்னையும் தங்கையையும் தங்கம்போல பார்த்துக் கொண்ட என் தாயாரை தங்கம்போல பார்த்துக்கொள்ள நான் விரும்புகிறேன்'' என்று தருண் கூறியுள்ளார். 

400 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளி வென்ற தருண் தாயார் பூக்கொடி

அவினாசியில் உள்ள பூங்கொடி கூறுகையில், '' என் மகனுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம். போட்டிக்குத் தயாராகும்  முயற்சியில் எங்களை சந்திக்க வருவதைக்கூட குறைத்துக்கொண்டான். தங்கம் வென்றுவிடுவான் என்றுதான் எதிர்பார்த்தேன். ஜகார்த்தாவில் அவன் ஓடுவதை மிகுந்த எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். வெள்ளிப்பதக்கம் வென்றதும் பெருமையாக உள்ளது. தருணின் தீவிர பயிற்சிக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே இதைப் பார்க்கிறேன். அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றிபெறுவான் என்று நம்புகிறேன். தருண் வெள்ளி வென்றதும் ஏராளமானோர் எங்கள் வீட்டுக்கு வந்து வாழ்த்துக் கூறிச் செல்கின்றனர் '' என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

ஆசிய தடகளத்தில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 விநாடிகளுக்குள் இலக்கை எட்டியுள்ளது, தருண் படைத்த குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். தருண் இலக்கை எட்டியது 48.96 விநாடிகளில் . சில மாதங்களுக்கு முன் பாட்டியாலாவில்  நடந்த ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தை 49.45 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்த தருண், தற்போது தன் சாதனையை  முறியடித்துள்ளார்.  ஜகார்த்தாவில் முதல் 50 மீட்டர்களில் தருண் பின்தங்கியிருந்தார். கடைசி கட்டத்தில் மின்னல் வேகமெடுத்து ஓடி, ஜப்பான் வீரர் தக்தோஷி அபேயை முந்தி, வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார். கத்தார் வீரர் அப்துர் ரஹ்மான் சம்பா 47.66 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி தங்கம் வென்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!