விமான நிலைய வாசலிலேயே நிச்சயதார்த்தம் - இந்தியாவின் தங்க மங்கையை ஆச்சர்யப்படுத்திய குடும்பத்தினர்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வினேஷ் போகத்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகிறது. இதில், மல்யுத்தப் போட்டியில் ஃப்ரீ ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ள இவர் வேறு யாருமல்ல. போகத் சகோதரிகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத்தின் உறவினர்தான். இவர்களது வாழ்க்கை வரலாறுதான் `டங்கல்' திரைப்படமாக வெளிவந்து பாலிவுட்டில் சக்கை போடு போட்டது. அந்த சகோதரிகளின் தந்தையான மகாவீர் சிங்கின் பயிற்சியின் கீழே வினேஷ் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார். 

இதற்கிடையே, தங்கம் வென்று தாயகம் திரும்பியுள்ள வினேஷை அவரின் குடும்பத்தினர் நெகிழவைத்தனர். ஆம், வினேஷ் போகத்துக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதுவும் விமான நிலையத்தில் வைத்தே. இந்தோனேசியாவில் இருந்து நேற்று டெல்லி விமான நிலையம் வந்த அவரை அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மாலைகள் அணிவித்துச் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். நேற்று வினேஷுக்குப் பிறந்த நாள் என்பதால் அனைவரும் வாழ்த்துகள் சொல்லக் குவிந்தனர்.

வினேஷ் போகத்

அப்போது அவரின் நண்பரான சோம்வீர் ரதியுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் விமான நிலைய வாசலிலேயே மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் கூச்சலிட்டு மகிழ்ந்தனர். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுடன் அவருக்கு காதல் என்று வதந்தி பரவியதை அடுத்து விமான நிலையத்திலேயே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது வட இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!