வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (28/08/2018)

கடைசி தொடர்பு:19:56 (28/08/2018)

தடகளத்தில் கலக்கும் வீரர்கள் - 50 வது பதக்கத்தைத் தொட்ட இந்தியா! #AsianGames2018

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 50 வது பதக்கத்தைத் தொட்டுள்ளது. 800 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு இன்று மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

மஞ்சித் சிங்

இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். 19-ம் தேதி முதல் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இந்தியா சார்பில் 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். ஆசிய விளையாட்டில் சீனா, ஜப்பான் நாடுகளின் ஆதிக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்களும் சாதனை புரிந்து வருகின்றனர். அந்தவகையில் டென்னிஸ், பளுதூக்குதல், கபடி, ஹாக்கி, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இன்று நடைபெற்ற பேட்மின்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டார். இதில் அபாரமாக விளையாடிய தாய் சூ யிங் 21 - 16 என்ற புள்ளிகளில் கைப்பற்றித் தங்கப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 

இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9 வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மஞ்சித் சிங் 1:46.15 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் 1:46.35 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து இரண்டாவதாக வந்தார்.

இதனால் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக டேபிள் டென்னிஸில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதேபோல் குராஷ் என்ற தற்காப்பு போட்டியில் இந்தியாவின் பிங்கி பல்கரா மற்றும் மலபிரபா யல்லப்பா ஜாதவ் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது இடம் பிடித்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

மேலும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோகியா, பூவம்மா ராஜு ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம், 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலப்பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேபோல் 50 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க