இந்திய விளையாட்டு உலகின் முதல் சூப்பர் ஸ்டார், தயான் சந்த்!

இதுவரை இந்திய ஹாக்கி அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். அதில், நினைவு கூரப்படுபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முதன்மையானவர், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்த். சில வருடங்களுக்கு முன்பு  ஓய்வுபெற்ற வீரரையே மறந்துபோகும் இந்த அவசர டிஜிட்டல் யுகத்தில், மறைந்து 39 ஆண்டுகள் கழித்தும் ஒருவர் நினைவுகூரப்படுகிறார் என்றால், அது அசாதாரணம். 

தயான்சந்த், ஹாக்கியை விளையாடவில்லை; அதற்குப் பதிலாக மாயாஜாலம் நிகழ்த்தினார். ஆம், அவரின் ஒவ்வொரு அசைவும் விந்தையே. இவரின் திறமையை எள்ளிநகையாடிய மேலைநாட்டவர், ஒருமுறை ஒரு கைத்தடியைத் தந்து அவரிடம் விளையாடக் கூறினார். அந்தக் கைத்தடியையே ஒரு மட்டை எனச் சுழற்றி கோல் அடித்த ஹாக்கியின் சக்கரவர்த்தி, இந்த தயான்சந்த். அவரின் பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிய சிறு தொகுப்பைக் காணலாம்.

தயான் சந்த்

அன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் அலகாபாத் நகரில், 29 ஆகஸ்ட் 1905ல் சமேஷ்வர் சிங், சாரதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் தயான்சந்த். இவருக்கு, உடன் பிறந்தோர் இரண்டு சகோதரர்கள்.  இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.  இவரைப் பின்பற்றி, சந்த்தும் தனது 16-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், ஹாக்கி பயிற்சியில் சேருவதற்கு முன்புவரை தயான்சந்த் ஒரு மல்யுத்த ஆர்வம் கொண்டவராகவே இருந்தார். எப்போது ஹாக்கி மட்டையைத் தன் கையில் எடுத்தாரோ, அன்று முதல் இறக்கும் வரை அவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஹாக்கியைச் சார்ந்தே இருந்துள்ளன.

தனது கடுமையான பயிற்சியின்மூலம் இந்திய ராணுவ ஹாக்கி அணியில் வெகு சீக்கிரத்தில் இடம்பிடித்தார். பகலில் தனது பணியை முடித்துவிட்டு, இரவு வேளையில் நிலவொளியில் பயிற்சி எடுத்த காரணத்தால், இவருக்கு 'சந்த்' என புனைபெயர் வந்தது. 1926 வரை இந்திய இராணுவ அணிக்காக விளையாடினார். ஒலிம்பிக்கில் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேசிய அணிக்குத் தேர்வானார். அன்று முதல்,  இவர் ஓய்வுபெறும் வரை இந்திய ஹாக்கி அணியை ஒரு இரும்புக் கோட்டையாகவே மாற்றியமைத்திருந்தார். ஹாக்கியில் இவர் இடம்பிடித்திருந்த இந்திய அணி, 3 முறை தங்கப்பதக்கம் பெற்றது. 

தயான் சந்த்

ஒருமுறை, கிரிக்கெட் உலக ஜாம்பவான் டான்பிராட்மேன், தயான்சந்த்தைப் பார்த்து, `நான் கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போன்று இவர் ஹாக்கியில் கோல் அடிக்கிறார்' என்றார். போட்டியின்போது, பந்தைத் திறமையால் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு, அவரின் ஹாக்கி மட்டையில் காந்தம் எதுவும் இருக்கிறதா என்று சோதித்த நிகழ்வுகளும் உண்டு. 1936-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியை 8-1 என்ற கோல் கணக்கில் வென்றது. உலகமே ஹிட்லரை பயத்துடன் கண்ட வேளையில், அவரின் சொந்த நாடான ஜெர்மனியில், அவரின் கண்முன்னே ஜெர்மனியை வீழ்த்தி, நமது தேசத்தை தலைநிமிரச்செய்தார். இவரின் திறமையைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கிக் கௌரவித்தது.

இந்தியாவுக்காகப் பல பதக்கங்களையும் பெருமைகளையும் பெற்றுத்தந்த இவர், டிசம்பர் 3, 1979-ம் வருடம் இவ்வுலகை விட்டு மறைந்தார். தயான்சந்த் பெயரில் விளையாட்டுத் திடல்கள், திட்டங்கள் எனப் பலவற்றை அரசு அமைத்துச் செயல்படுத்திவருகிறது. இவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக, இந்திய அரசு, 2002-ம் ஆண்டு முதல் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்போருக்கு, இவரின் பெயரில் விருது வழங்குகிறது. இவரின் பிறந்தநாளை (இன்று), தேசிய விளையாட்டு தினமாக அங்கீகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!