வெளியிடப்பட்ட நேரம்: 22:18 (30/08/2018)

கடைசி தொடர்பு:22:18 (30/08/2018)

`தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வெட்டோரி நீக்கம்' - ஆர்.சி.பி நிர்வாகம் அதிரடி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டேனியல் வெட்டோரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

கேரி ஃகிறிஸ்டன்

photo credit: twitter/@RCBTweets

இந்தியாவின் பிரபல பிரீமியர் தொடரான ஐ.பி.எல் தொடர் 11 சீசன்களைக் கடந்துவிட்டது. இந்த 11 சீசன்களையும் முழுமையாக விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கோப்பையை உச்சிமுகரவில்லை. இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றும் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 6வது இடத்தையே பிடித்தது அந்த அணி. அதிலும், விராட் கோலி,  டிவில்லியர்ஸ், மெக்கலம், மனன் வோரா, கிறிஸ் வோக்ஸ், பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர், குயின்டன் டீ காக் உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால் பெங்களூரு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த தோல்விக்குப் பின் அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 4 ஆண்டுகளாகப் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டேனியல் வெட்டோரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி ஃகிறிஸ்டன் தற்போது தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கேரி ஃகிறிஸ்டன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. 

பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேரி ஃகிறிஸ்டன் கூறுகையில், ``வெட்டோரி தலைமையில் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அந்த அனுபவத்தை ரசித்துச் செய்தேன். தற்போது இந்தப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறேன். பெங்களூருவோடு தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்த அளவும் சிறப்பான பணியை அணிக்கு வழங்குவேன். அணி நிர்வாகத்துக்கு நன்றி. இனி வரும் ஆண்டுகள் சிறப்பாக அமையும்" என நம்பிக்கை தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க