நோ மெஸ்ஸி, நோ ரொனால்டோ... இது லூகா மோட்ரிச் டர்ன்! | All set for Luka Modric to win Ballon d'Or

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (31/08/2018)

கடைசி தொடர்பு:10:42 (04/09/2018)

நோ மெஸ்ஸி, நோ ரொனால்டோ... இது லூகா மோட்ரிச் டர்ன்!

நோ மெஸ்ஸி, நோ ரொனால்டோ... இது லூகா மோட்ரிச் டர்ன்!

வ்வோர் ஆண்டும் அந்த விருது விழா நடக்கும். சில நூறு போட்டியாளர்கள் கோதாவில் இருப்பார்கள். ஒவ்வொரு முறையும், இறுதி 3 இடத்தில் அவர்கள் இருவர் வந்துவிடுவார்கள். மூன்றாவது இடம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், வெற்றியாளர்கள் அவர்கள் இருவர்தான். கடந்த 10 ஆண்டுகளாகக் கால்பந்து உலகம் பழகிப்போன விஷயம் இது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி இருவரின் ஆதிக்கமும் கால்பந்தை ஒரே `டெம்ப்ளேட்'டுக்குள் வைத்திருந்தது. பாலன் டி ஓர், ஃபிஃபா பெஸ்ட் பிளேயர் என எந்த விருதாக இருந்தாலும் இவர்கள்தான் டாப் - 2 சாய்ஸ். இந்த வருடம், இந்த 10 வருட வழக்கம் முடிவுக்கு வரவிருக்கிறது. சொல்லப்போனால் முடிவை எட்டியும் இருக்கிறது. 2018-ம் ஆண்டுக்கான `UEFA பிளேயர் ஆஃப் தி இயர்' விருதை வென்றிருக்கிறார் லூகா மோட்ரிச். அதுவும் ரொனால்டோவைப் பின்னுக்குத்தள்ளி!

ஆனால், இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு முன்பு பலமுறை பாலன் டி ஓர் விருது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஒவ்வொரு முறையும், வேறு ஒரு வீரர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தாலும் ரொனால்டோ, மெஸ்ஸி மட்டுமே பிரதானப்படுத்தப்படுவார்கள். அதையெல்லாம் தாண்டி மோட்ரிச் இந்த விருதை வென்றிருக்கிறாரென்றால் அதற்குக் காரணம் 2018 உலகக் கோப்பை. அதில் அவர் வென்ற `கோல்டன் பால்' விருது!

லூகா மோட்ரிச்

2014 பிரேசில் உலகக் கோப்பையில் மெஸ்ஸி, கோல்டன் பால் விருதை வாங்கியபோது சலசலப்பு ஏற்பட்டது. `கோல்டன் பால்’ விருது என்ன ஆறுதல் பரிசா. நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட அடிக்காதவர் எப்படிச் சிறந்த வீரராக முடியும் என்ற கேள்வி எழுந்தது. ரஷ்யாவில் சமீபத்தில் முடிந்த 2018 உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதை, குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச் வாங்கியபோது எல்லோரும், `சரியான சாய்ஸ்’ எனப் பாராட்டினர். 

`Captaincy is all about either pulling from the front or pushing from behind’ - கேப்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, `டைகர்’ பட்டோடி சொன்ன விளக்கம் இது. இந்த உலகக் கோப்பையில் லூகா மோட்ரிச் Pulling from the front என்பதற்கு முன்னோடியாக இருந்தார். 33 வயதில் பாக்ஸ் டு பாக்ஸில் ரன்னிங்கில் பின்னியெடுத்தார். ஃபைனலுக்கு முன்புவரை ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பையில் 40 மைல் தூரத்தைக் கடந்திருந்தார். மற்ற இளம் வீரர்களுக்குப் பெரிய இன்ஸ்ப்ரேஸனாகத் திகழ்ந்தார். 

பொதுவாக, 30 வயதைக் கடந்த வீரர்கள், 70 நிமிடத்துக்கு மேல் களத்தில் ஆக்டிவாக இருப்பது குறைவு. மோட்ரிச் இந்தத் தொடரில் கொஞ்சம் கூட சோர்வடையவில்லை. குரோஷியா நாக் அவுட் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளும் 120 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே, மோட்ரிச் வெளியே வந்தார். அதுவும் கடைசி இரண்டு நிமிடங்கள் மட்டுமே. மற்ற அனைத்துப் போட்டிகளிலும் களத்தில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்றார்.

இந்த உலகக் கோப்பையில் குரோஷியா ஓர் அற்புதமான அணி. 50-50 சதவிகிதம் பந்தை வின் பண்ணி, முட்டி மோதி கோல் அடிக்கவல்ல மேண்ட்சுகிச் ஸ்ட்ரைக்கர்; களம் முழுக்க ஓடி, எதிரணியின் டிஃபண்டர்களை டேஞ்சர் ஜோனுக்கு அழைத்துவரவல்ல விங்கர்கள் ரெபிச், ப்ரஸோவிச், பெரிசிச்; பொசிஷன் அவார்னஸ், பிரில்லியன்ட் பாஸிங் எனப் பட்டையைக் கிளப்பும் மிட்ஃபீல்டர் ரகிடிச், ஜஸ்ட் லைக் தட் எனப் டேக்கிள் செய்யும் டிஃபண்டர்கள் விடால், லோவ்ரன் எனப், குரோஷியா பக்காவான அணி. ஆனால், அங்கு மிஸ்ஸானது ஒரு ஆர்ட்டிஸ்ட். அந்த இடத்தைச் சரியாக நிரப்பியவர் மோட்ரிச்.

மோட்ரிச் ஒரு Underrated player. அர்ஜென்டினாவுக்கு எதிராக அவுட் சைட் தி பாக்ஸில் இருந்து கோல் அடித்தபின்னரே, லூாகா மோட்ரிச்சை பாராட்டியது கால்பந்து உலகம். ஆனால், ஸ்டார்கள் நிறைந்த ரியல் மாட்ரிட் கிளப்பிலேயே, சைலன்ட்டாக மிரட்டிக் கொண்டிருப்பவர் மோட்ரிச். விங் டு விங் லாங் பாஸ், டிரிபிளிங், செட் ஃபீஸ் எடுப்பது, களத்தை நொடியில் ஸ்கேன் செய்வது, எதிரணி டிஃபண்டர்களை பாக்ஸுக்கு வெளியே இழுப்பது, சக வீரர்களுக்கு ஸ்பேஸ் கொடுப்பது, கமாண்டிங், டிக்டேட்டிங் எனப் மோட்ரிச் ஒரு கம்ப்ளீட் மிட்ஃபீல்டர். அதனால்தான், யாருடைய பெஸ்ட் லெவனிலும் அவர் பெயர் மிஸ்ஸாவதில்லை. அவர் உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதை வென்றதில் ஆச்சர்யமும் இல்லை!

ரியல் மாட்ரிட் அணிக்கான அவரது பங்களிப்பும் சாதாரணமானது அல்ல. கிளப் உலகக் கோப்பை வென்றுதான் 2017/18 சீசனை வெற்றிகரமாகத் தொடங்கியது ரியல் மாட்ரிட். அந்தத் தொடரின் சிறந்த வீரர் விருதை வாங்கியது மோட்ரிச்தான். ஆனால், அப்போது யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அவரின் அசத்தல் ஆண்டு அப்போது அமர்க்களமாகத் தொடங்கியது. 2014 உலகக் கோப்பையின் கோல்டன் ஷூ விருது வென்ற ஜேம்ஸ் ராட்ரிக்யூஸ் இவரை மீறி அணியில் இடம்பிடிக்க முடியாததால் பேயர்ன் மூனிச் அணிக்குச் சென்றார். இவ்வளவு ஏன்...  இஸ்கோ, அசேன்ஸியோ, டேனி காபயோஸ் எனப் இளைஞர்கள் சவாலளித்தபோதும் அவரது இடத்தை எவராலும் பிடிக்க முடியவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேப்டன் செர்ஜியோ ரமோஸ் இருவருக்கும் பிறகு அணியின் அசைக்க முடியாத ஆள் மோட்ரிச்தான். 

லூகா மோட்ரிச்

குரோஷியா அணிக்காக ஆடியதைப்போல் அட்டாக், டிஃபன்ஸ் இரண்டிலும் போராட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், உலகின் மிகப்பெரிய பிராண்டுக்கு ஆடும் நெருக்கடி அதிகம். ஒரு மிஸ் பாஸ், ஒரு தவறு, ஒரு கோல் மிஸ்... மாட்ரிட் ரசிகர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் வசைபாடுவார்கள். ரொனால்டோவையே திட்டித் தீர்ப்பவர்கள் அவர்கள். ஆனால், மோட்ரிச் பெர்ஃபெக்ஷனின் உச்சம். ரைட் பேக் கொடுக்கும் பாஸை, தன் பாக்ஸுக்குள் வாங்கி எதிரணியின் கோல் போஸ்டுக்கு அருகில் இருக்கும் ரொனால்டோவுக்குப் போடும் `பின் பாயின்ட்' கிராஸ்கள் எதிரணி ரசிகர்களையும் சிலிர்க்கவைக்கும். 

லா லிகா தொடரின் கடினமான டிஃபண்டர்களை ஊடுருவிச் செல்லும் இவரது பாஸ்கள் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கே ஆச்சர்யமளிக்கும். டிஃபன்ஸில் கவனம் செலுத்தும் இளம் வீரர் கேஸமிரோவுக்கு மிகப்பெரிய உறுதுணையும் இவர்தான். அவரின் வளர்ச்சியிலும் இவரது பங்கு அதிகம். கடந்த 3 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் வென்றபோது, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட சிறந்த லெவன்களில் 3 முறையும் இடம் பிடித்தார். நடுகளத்தில் இவரது பங்களிப்பு வேற லெவல்!

ஒருவழியாக குரோஷியாவின் அசாத்திய உலகக் கோப்பை இந்த மனிதனை உலகின் பார்வைக்கு, விருதுக் குழுவின் பார்வைக்கு எடுத்துவந்துவிட்டது. பாலன் டி ஓர் விருதை மட்டும் மோட்ரிச் வென்றுவிட்டால், இந்த தசாப்த காலத்தின் மிகச்சிறந்த மிட்ஃபீல்டர் என்ற பெருமையையும் பெற்று விடுவார். ரொனால்டோ யுவன்டஸ் அணிக்குச் சென்ற பிறகு, இவரது ஜெர்சியைத்தான் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிகம் ஆர்டர் செய்கிறார்களாம். கால்பந்து மாறுகிறது..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்