கோலி தலைமையில் நல்ல அணிதான்... ஆனாலும், ஏன் தோற்றுப்போகிறோம்? #ENGvIND

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை இழக்காமல் நீண்ட நேரம் களத்தில் நிற்பதே ரன் அடிப்பதற்குச் சமம். அதைத்தான் பென் ஸ்டோக்ஸ் செய்தார். 110 பந்துகள் வரை தாக்குப்பிடித்து நின்றவர் 30 ரன்கள்தான் அடித்தார். ஆனால், 30 ரன்களைவிட அவர் தாக்குப்பிடித்து நின்ற 110 பந்துகள்தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானது. இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தெரியாததல்ல.

கோலி தலைமையில் நல்ல அணிதான்... ஆனாலும், ஏன் தோற்றுப்போகிறோம்? #ENGvIND

ங்கிலாந்தில் மூன்றாவது தோல்வி. தொடரும் காலி. ``இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிடத் தைரியமானவர்களாக இருந்தார்கள்'' என்று தோல்விக்குப் பின் சொல்லியிருக்கிறார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை இழக்காமல் நீண்ட நேரம் களத்தில் நிற்பதே ரன் அடிப்பதற்குச் சமம். அதைத்தான் பென் ஸ்டோக்ஸ் செய்தார். 110 பந்துகள் வரை தாக்குப்பிடித்து நின்றவர் 30 ரன்கள்தான் அடித்தார். ஆனால், 30 ரன்களைவிட அவர் தாக்குப்பிடித்து நின்ற 110 பந்துகள்தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானது. இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும், ஏதோ அவசரத்தில் இருப்பதுபோலவும், பந்துகள் இல்லை, நேரம் குறைவாக இருப்பதுபோலவும் டார்க்கெட்டை நோக்கி அவசரப்பட்டு ஆடியதும், ரன்கள் எடுப்பதற்குப் பதில் விக்கெட்டுகளை இழந்ததும் பார்க்க பரிதாபமாக இருந்தது. கோலியின் அணி நல்ல அணிதான். ஆனாலும் நாம் ஏன் தோல்வியடைகிறோம்?

கோலி

நல்ல தொடக்கம் எங்கே?

38 டெஸ்ட்டுகளாக அணியை மாற்றிக்கொண்டே வந்த சாதனையை 39 டெஸ்ட்டில் முடித்துக்கொண்டார் கோலி. ஆனாலும், அணியின் அமைப்பு சரியாகவில்லை. முதல் இரண்டு டெஸ்ட்டுகளாக ஓப்பனிங்கில் சொதப்பிய முரளி விஜய்யைத் தூக்கிவிட்டு மூன்றாவது டெஸ்ட்டை தவான் - கே.எல் ராகுல் பார்டனர்ஷிப்புடன் தொடங்கினார் கோலி. இந்த பார்ட்னர்ஷிப் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றது. அதற்காகவே மூன்றாவது டெஸ்ட்டில் அதே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்போடு இறங்கினார் கோலி. ரிசல்ட் ஏமாற்றம்தான். முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட் 37 ரன்களில் விழ, இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களுக்குள் கதை முடிந்தது. இங்கிலாந்தில் இந்தியாவின் தோல்விகளுக்கு மிக முக்கியக் காரணம் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் பார்ட்னர்ஷிப்.

கோலி

மிடில் ஆர்டர் பேட்டிங்!

கோலி, புஜாரா, ரஹானே என இந்த மூவருமே நான்காவது டெஸ்ட்டில் நன்றாக விளையாடினர். கோலி முதல் இன்னிங்ஸில் 44 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 58 ரன்களும் அடித்தார். புஜாரா முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் அடித்தார். ராஹானே இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் அடித்தார். ஆனால், முதல் இன்னிங்ஸில் இருந்த நம்பிக்கை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சேஸிங் செய்யும்போது இல்லை. கோலியை இழந்ததும் ஒட்டுமொத்த அணியும் நம்பிக்கையை இழந்தது. 

இங்குதான் கோலிக்கு அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் இது டெஸ்ட் மேட்ச் என்பதை உணர்ந்து ஆடியிருக்கவேண்டும். ஆனால், ரன்களை அடிப்பதுதான் நோக்கம் என்பதுபோல ஆடி விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தார்கள். முதல் இன்னிங்ஸில் 28 பந்துகளை எதிர்கொண்டு ரன்களை எடுக்காமல் வெளியேறினார் ரிஷப் பன்ட். ஆனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டார் என்கிற நிம்மதி பிறந்தது. ஆனால், அதை  இரண்டாவது இன்னிங்ஸில் காற்றில் பறக்கவிட்டார். 127 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்தது இந்தியா. அஜிங்கியா ரஹானே களத்தில் நிற்கும்போதுதான் ரிஷப் பன்ட் வருகிறார். சூழலைப் புரிந்துகொண்டு அவர் ஆடுவார் என எல்லோரும் எதிர்பார்க்க, அவர் டி20 மோடுடன் உள்ளே வந்தார். 12 பந்துகளில் 18 ரன்கள்... 1 சிக்ஸர் 2 பவுண்டரி என 20/20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர் ஆடுபவர் போல ஆடிவிட்டுப் போனார். டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பக்குவம் இந்த வீரர்களுக்கு இல்லை என்பதற்கு சாட்சி இது.

கோலி

ஸ்பின் என்ன ஆச்சு?

நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய நாளே அணியை அறிவித்தது இங்கிலாந்து. முதல் மூன்று டெஸ்ட்டுகளிலுமே விளையாடாத மொயின் அலியுடன் அணியை அறிவித்தது இங்கிலாந்து. மொயின் அலி ஆஃப் ஸ்பின்னராக வர, லெக் ஸ்பின்னராக ஆதில் ரஷித்தும் அணிக்குள் இருந்தார். கோலியைக் குழப்புவதற்காகவே இரண்டு ஸ்பின்னர்களை அணிக்குள் எடுத்திருக்கிறார் ஜோ ரூட் என்பது புரிந்தது. ஆனால், சவுத்தாம்ப்டன் விக்கெட் ஆஃப் ஸ்பின்னுக்கு அவ்வளவு சாதகமான பிட்ச்சாக இருந்தது.

மொயின் அலி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால், இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் 51 ஓவர்கள் வீசி வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அதுவும் மொயின் அலியின் பெளலிங்கைப் பார்த்துவிட்டு அஷ்வினுடன்தான் இரண்டாவது இன்னிங்ஸையே தொடங்கினார் கோலி. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓவர்கள் வீசிய அஷ்வினால் கடைசியாக ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் எடுக்க முடிந்தது. ஆஃப் ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்ச்சில் அஷ்வின் சொதப்பிய சொதப்பலும், நான்காவது டெஸ்ட்டின் தோல்விக்குக் காரணம்.

2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்திருக்க வேண்டிய வாய்ப்பையும் இழந்து, தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி. சோகம் ஐந்தாவது டெஸ்ட்டிலும் தொடரும் என்பதற்கான அறிகுறிகளே தெரிகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!