வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (05/09/2018)

கடைசி தொடர்பு:08:30 (05/09/2018)

‘சென்னையில் டி-20 கிரிக்கெட்!’ - அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 11-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து ஆசியக் கோப்பை போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்தத் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 முதல் 28-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. ஆசியப் போட்டிகள் முடிவடைந்த ஒரு வாரக் காலத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்.,4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் அக்., 12-ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி முதல் நவம்பர் 1 -ம் தேதி வரை ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை டி-20 போட்டிகள் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.