வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (06/09/2018)

கடைசி தொடர்பு:12:40 (06/09/2018)

`டிராவிட் சம்மதம் தெரிவித்தார்; ரவி சாஸ்திரியை சந்தித்த பின் நியமிக்கப்படவில்லை' - கங்குலி வேதனை

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராகப் பணியாற்ற டிராவிட் சம்மதித்தும் அது நடைபெறவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார். 

டிராவிட்

இந்திய அணி தற்போது இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. கடைசிப் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இந்திய அணியின் தோல்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால் ரவி சாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணிதான் வெளிநாடுகளில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ரவி சாஸ்திரி

கங்குலி, டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ யின் ஆலோசனைக் குழுவில் உள்ளனர்.  இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ரவி சாஸ்திரி பயிற்சியாளராகப் பதவியேற்றபோது  நடைபெற்ற சில விஷயங்கள் தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டார். அவர்  கூறுகையில், ``கிரிக்கெட் ஆலோசனைக் குழு சார்பாக ரவி சாஸ்திரி பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வெளிநாடுகளுக்கு இந்திய அணி விளையாடச் செல்லும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் மற்றும் பந்துவீச்சு ஆலோசகராக ஜாகீர் கான் ஆகியோரை நியமிக்க முடிவு செய்தோம். எங்களின் இந்த முடிவுக்கு ராகுல் டிராவிட்டும் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் அவர், ரவி சாஸ்திரியை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிலும், அதன் பின்னரும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஆலோசகராக நியமிக்கப்படவில்லை” என்றார். 

கங்குலி

ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான பின்னர், இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கரும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும் நியமிக்கப்பட்டனர். ராகுல் டிராவிட் மற்றும் ஜாகீர் கானும் வெளிநாட்டில் அதிக  கிரிக்கெட் போட்டிகள்  விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் அணியின் ஆலோசகராக இருந்திருந்தால், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடிருக்க முடியும் என்ற கருத்துகளும் வரதொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், ``ராகுல் டிராவிட் அல்லது ஜாகீர் கான் நியமிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆலோசனைக் குழுவிடம் பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பான பொறுப்புகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டிருந்தது.  அதேபோன்று கருத்து வேறுபாடு காரணமாகவோ வேறு காரணத்தினாலே அனில் கும்பிளே நீக்கப்படவில்லை. அவர் ஒருவருடத்துக்குத் தான் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதுப் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டார்” என்றார்.