`நீங்கள் சாம்பியன்தான்!’ - தகுதிநீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரரை நேரில் கௌரவித்த அமைச்சர்!#GLakshmanan

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரர் லட்சுமணனை சந்தித்துப் பாராட்டினார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோர். 

லட்சுமணன்


18 வது ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்றது. இந்த விளையாட்டுத் தொடரில் இந்தியா 15 தங்கம் உள்ளிட்ட 69 பதக்கங்கள் வென்று 8 வது இடம் பிடித்தது. குறிப்பாக, இந்தத் தொடரில் தடகள வீரர் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்றனர். தமிழக தடகள வீரரான லட்சுமணன் 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது வீரராக வந்தார். ஆனால், லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்துக்கு வெளியே கால் வைத்ததால், தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, நான்காவதாக வந்த சீன வீரர் சாங்காங் ஷாவோவுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 

எனினும் லட்சுமணனின் முயற்சிக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், அவரை வெற்றியாளராகத்தான் வரவேற்க வேண்டும் என்றார். தற்போது இந்திய அவீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். பதக்கம் வென்ற இந்திய வீரர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, அடுத்து வரும் ஒலிம்பிக் தொடருக்கு தயாராகுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். 

அமைச்சர் ரத்தோர்

இந்நிலையில் இன்று பதக்கத்தை இழந்த தமிழக வீரர் லட்சுமணனை சந்தித்த மத்திய விளையட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் அவரைப் பாராட்டி அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரத்தோர், “லட்சுமணன் கோவிந்தன் ஆசியக் கோப்பை தொடரில் அபாரமாகச் செயல்பட்டார். சிறு தவறு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். எப்படி இருந்தாலும் அவர் நமது சாம்பியன். நாம் அவருடன் துணை நிற்போம். அவரைப் சந்தித்தது எனக்குப் பெருமையான தருணம்” என்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!