ஐ-லீக் தொடர்... ரியல் காஷ்மீர் அணியில் ராவணன்!

ஐ-லீக் கால்பந்து தொடரில் முதல் முறையாகக் களம் காணும் ரியல் காஷ்மீர் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார் தமிழக வீரர் ராவணன். கடந்த சீஸனில் சென்னை சிட்டி அணிக்கு ஆடிவந்தவர், அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இப்போது காஷ்மீர் நோக்கிப் பயணித்துள்ளார். 

31 வயதான ராவணன் திருச்சியைச் சேர்ந்தவர். டிஃபண்டர். தன் இளமைக் காலத்தில் இந்தியன் வங்கி அணிக்காக விளையாடியவர், கோவாவின் டெம்போ அணியோடு தன் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவின் மிகவும் பிரசித்திபெற்ற மோஹன் பாஹன் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மஹிந்திரா யுனைடெட், சர்ச்சில் பிரதர்ஸ் எனப் பல முன்னணி அணிகளுக்கு விளையாடியுள்ள ராவணன், ஐ.எஸ்.எல் தொடரில் புனே சிட்டி அணிக்காவும் விளையாடியுள்ளார். 

ராவணன்

கடந்த சீஸனில் ஐ-லீக் தொடரின் இரண்டாவது டிவிஷனில் விளையாடியபோதே ரியல் காஷ்மீர் அணி ராவணனை தொடர்புகொண்டுள்ளது. அப்போது 'சி லைசன்ஸ்' பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவரால் அந்த அணியோடு இணைய முடியவில்லை. இந்த சீஸனில் காஷ்மீர் அணி முதல் டிவிஷனுக்கு புரொமோட் ஆகியுள்ள நிலையில் அவர்களோடு இணைந்துள்ளார் ராவணன். 

2008 முதல் 2010-ம் ஆண்டு வரை 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ளார். ஐ-லீக், ஐ.எஸ்.எல் என இரண்டு முக்கிய தொடர்களிலும் சேர்த்து இதுவரை 276 போட்டிகளில் விளையாடியுள்ள ராவணன், 1 கோல் (சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்காக) அடித்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐ-லீக் பட்டமும் 2014-ம் ஆண்டு ஃபெடரேஷன் கோப்பையும் வென்ற சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்குக் கேப்டனாகவும் இருந்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!