‘நடால் ஹெட் பேண்ட் கழற்றிய அந்த நிமிடம்!’ -அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் #US_Open

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக அரையிறுதிப்போட்டியில் இருந்து நடால் பாதியில் வெளியேறினார்.

அமெரிக்க ஓபன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப்போட்டிகள் இன்று நடைப்பெற்றது. இதில் முதல்நிலை வீரர் ரபேல் நடால் - டெல்போட்ரோவை எதிர்க்கொண்டார். இதில் முதல் செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அப்போது நடாலுக்கு காலில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக்கொண்டார். காலில் வலி குறைவதற்காக டேப் ஒட்டப்பட்டது. கடுமையாக போராடிய நடால்  இந்த செட்டை 6-7என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட் ஆடிக்கொண்டிருக்கும் போது நடாலுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட இவருக்கு மைதானத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட நடால் மீண்டும் களத்துக்கு திரும்பினார். வலி ஏற்பட்ட இடத்தில் டேப் சுற்றப்பட்டிருந்தது. அதனைக்கொண்டே விளையாடினார். ஆனால் இந்த செட்டை அவர்  2-6 என்ற கணக்கில் இழந்தார்.

நடால்இதனையடுத்து மூன்றாவது செட் ஆட்டம் தொடர்ந்தது. நாடலுக்கு வலி அதிகமானதால் தன்னால் விளையாட முடியாது என போட்டி நடுவரிடம் கூறி விலகினார். நடால் தனது தலையில் அணிந்திருந்த ஹெட் பேண்டை கழற்றியதுமே போட்டி நடைப்பெற்ற மைதானமே அமைதியானது. இதனையடுத்து டெல்போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டெல்போட்ரோ இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நடால் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

போட்டிக்கு பின்னர் பேசிய நடால், “போட்டி முடிவதற்கு முன்பே பாதியில் வெளியேறுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் அந்த தருணத்தில் முடிவு எடுத்தாக வேண்டும். வலிகளுடன் விளையாடுவது என்பது கடினமான ஒன்று. இந்தப்போட்டி கடைசியில் எப்படி இருந்து இருக்கும் என்றால் ஒரு வீரர் மட்டுமே விளையாடிக்கொண்டிருப்பார். மற்றோருவர் ஆடுகளத்தின் மற்றோரு பகுதியில் நின்றுகொண்டிருப்பது போன்று இருந்திருக்கும்”என்றார்.

டெல்போட்ரோ பேசுகையில், “ நடாலுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புவேன். களத்தில் அவருடன் கடினமாக போராட வேண்டி இருக்கும். இப்படி வலியுடன் நடால் விளையாடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதிப்போட்டிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.”என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!