வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (08/09/2018)

கடைசி தொடர்பு:19:59 (08/09/2018)

`9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள்!’ - ஓவல் டெஸ்டில் 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து #EngvsInd

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராட் ஜோடி

Photo Credit : ICC

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இங்கிலாந்து மூன்று போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கிஸ், ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், குக் மற்றும் ஜென்னிங்க்ஸ் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜென்னிங்க்ஸ் 23 ரன்களில் வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக, மொயின் அலி களமிறங்கினார். குக் மற்றும் மொயின் அலி இணை ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் குக் 71 ரன்களையும், மொயின் அலி சதமடித்தும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. பட்லர் 11 ரன்களுடனும், அடில் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜடேஜா

Photo Credit : ICC

 இரண்டாம் நாளான இன்று, போட்டி தொடங்கிய சிறிதுநேரத்திலேயே ரஷீத், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், அந்த அணி 250 ரன்கள் குவிப்பதே சிரமம் என்று கருதப்பட்டது. இந்தநிலையில், 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோஸ் பட்லர் - ஸ்டுவர்ட் பிராட் ஜோடி, இந்திய அணிக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் அரை சதமடித்தார். இந்திய பவுலர்களைச் சோதித்த இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடக்க உதவியது. இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார். ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட், கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட்லருக்கு பொறுமையாக ஒத்துழைப்புக்  கொடுத்த பிராட் 59 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறிதுநேரத்திலேயே பட்லரும் வெளியேற, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 332 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. பட்லர் 89 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.