`கத்துக்குட்டியிடம் வீழ்ந்த செரீனா' - முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை உச்சிமுகர்ந்த ஜப்பான் வீராங்கனை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 20 வயது ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து பட்டத்தை இழந்துள்ளார்.

நவோமி ஒசாகா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸும், ஜப்பானைச் சேர்ந்த 20 வயது வீராங்கனையான நவோமி ஒசாகாவும் தகுதி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு செரீனாவுக்கு குழந்தை பிறந்து. மகப்பேறு முடிந்த சில மாதங்களிலே செரீனா களத்துக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவரது ஆட்டங்களில் முன்போல் அனல் பறக்கவில்லை. ஒவ்வொரு வெற்றிக்கும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி வந்தார். 

தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவா உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்தி தனது பழைய பார்முக்கு திரும்பினார். 9வது முறையாக அமெரிக்க ஒபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா இந்தமுறை பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருந்தவர் ஜப்பானைச் சேர்ந்த 20 வயது வீராங்கனையான நவோமி ஒசாகா. ஒசாகா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நுழைந்த முதல் ஜப்பான் வீராங்கனை ஆவார். இதனால் எளிதில் அவரை வென்று தனது  24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் செரீனா என அவரது ரசிகர்கள் ஆவலில் இருந்தனர். 

நவோமி ஒசாகா

அவர்களின் எண்ணத்துக்கு மாறாக தான் கத்துக்குட்டி கிடையாது என நிரூபித்துள்ளார் ஒசாகா. இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டை 6-2 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். இதன்மூலம் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல்முறையாக உச்சிமுகர்ந்துள்ளார் ஒசாகா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!