வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (09/09/2018)

கடைசி தொடர்பு:10:59 (09/09/2018)

‘கோலி தான் எங்க கேப்டன் ’- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெங்களூரு அணி

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு பதில் டி-வில்லியர்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை பெங்களூரு அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

விராட் கோலி


இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராத் கோலி உள்ளார்.  இது வரை நடைபெற்ற எந்த தொடரிலும் பெங்களூரு அணி கோப்பையை கைபற்றவில்லை. கோப்பையை வெல்வதற்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கோலி, கிறிஸ் கெய்ல், டி-வில்லியர்ஸ், போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியாமல் போனது. இதனால் கடந்த மே மாதம் நடைப்பெற்ற  ஐபிஎல் போட்டியில் பல்வேறு மாறுதல் கொண்டு வரப்பட்டது. கிறிஸ் கெய்ல் அணியில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டார் இருந்தும் அதனால் எந்த பயனும் இல்லை. 

விராட் கோலி இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் டி-20 தொடரை மட்டுமே இந்தியா கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தனி நபராக கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் அணியின் செயல்பாடு மோசமாக உள்ளது. இந்த நிலையில் தான் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேட்பன் பொறுப்பில்  இருந்து கோலி நீக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு பதிலாக டி-வில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெட்டோரி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரி கிரிஸ்டனும் பந்துவீச்சு பயிற்சியாளராக நெஹ்ராவும் நியமிக்கப்பட்டனர். எனவே கோலி நீக்கம் இருக்கலாம் என நம்பப்பட்டது.

இதுவரை மவுனமாக இருந்த பெங்களூரு அணி நிர்வாகம் இந்த தகவலை தற்போது மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையிடம் பேசிய பெங்களூரு அணி நிர்வாகத்தினர்  ‘விராட் கோலி பெங்களூரு அணியின் சிறந்த கேப்டன் அடுத்த சீசனிலும் அவரே கேப்டனாக தொடர்வார்’ என தெரிவித்துள்ளனர்.