வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (09/09/2018)

கடைசி தொடர்பு:16:42 (09/09/2018)

சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வான் கோழி வளர்ப்பிலும் அசத்தல்!

சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வான் கோழி வளர்ப்பிலும் அசத்தல்!

உயரம் குன்றியவர்களுக்கான 7-வது உலக தடகளப் போட்டியில் மூன்று தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் கணேஷன்,  வான் கோழி வளர்ப்பிலும் அசத்திவருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாதரையைச் சேர்ந்தவர் கணேஷன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பல தங்கப் பதக்கங்களைக் குவித்துவருகிறார். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க, வான்கோழி வளர்ப்பிலும் விவசாயத்திலும் சுயதொழில் செய்து இளைஞர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

வான் கோழி

இவரைச் சந்திக்க, அவரது வான்கோழிப் பண்ணைக்குச் சென்றோம். தென்னந்தோப்பில் வான்கோழிகளைச் சுதந்திரமாகத் திறியவிட்டுக்கொண்டிருந்தார். வான்கோழிகள் பயமுறுத்துவதுபோல் ஓசை எழுப்பினாலும், அவரோடு நாய்குட்டிகள்போல செல்லமாக விளையாடின.

வான்கோழிகளை அடைத்த பிறகு நம்மிடம் பேசத் தொடங்கினார் கணேஷன். ``நான் ப்ளஸ் டூ-வுல தேர்ச்சி பெறாததால எங்க அப்பாகூட விவசாயம் செய்ய வந்துட்டேன். எனக்கு ரெண்டு அண்ணன், மூணு அக்கா. நான்தான் கடைசி. விவசாயம், தென்னந்தோப்பு, கால்நடைகள்தான் எனக்கு பல ஆண்டுப் பயணமா போயிக்கிட்டிருக்கு. விளையாட்டைப் பற்றி அந்த அளவுக்கு எனக்கு விவரம் தெரியாது. என்னைப்போல உயரம் குறைந்த நபர் மனோஜ் என்பவரின் நட்பு கிடைச்சது. அவரிடம் என் மனக்கசப்புகளைப் பகிர்ந்துக்கிட்டேன். அவர் என்னை ஆறுதல்படுத்தி பல விஷயங்களை எனக்கு அறிவுரையா சொன்னார். `உயரம் குன்றியவங்களுக்கு என தனி விளையாட்டுப் போட்டிகள் உள்ளன. அதில் நாம் தொடர்ந்து உழைத்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்'னு எனக்குத் தெம்பூட்டினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளர் ரஞ்சித்தையும் எனக்கு அறிமுகம் செஞ்சார். 2015 நவம்பரில இருந்து கடுமையான பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். என்னை அறியாமலேயே எனக்குள்ள பல தன்னம்பிக்கையும் பலமும் கிடைச்சது. தினமும் பயிற்சி செய்றதுல ஆர்வமும் அதிகமாச்சு. அதேசமயம் எனக்கு வாய்ப்புகளும் கிடைச்சது. பல கட்டங்கள்ல தேர்ச்சி பெற்று விளையாட்டுப் போட்டிகள்ல வாகை சூடினேன்.

2016-ல உயரம் குன்றியவர்களுக்கான தேசிய அளவு போட்டியில பங்கேற்க வாய்ப்பு கிடைச்சது. வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல்னு மூணு போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு, வட்டு எறிதல்ல தங்கமும், குண்டு எறிதல்ல வெள்ளியும், ஈட்டி எறிதல்ல வெங்கலமும் ஜெயிச்சேன். வட்டு எறிதல்ல 21 மீட்டர் எறிந்தது ரெக்கார்டா அமைஞ்சது. அந்த வெற்றிதான், எனக்கே என்னை அடையாளப்படுத்துச்சு. அந்த வேகம், இன்னும் பல போட்டிகள்ல வெற்றிபெற உதவியாயிருந்துச்சு.

தொடர்ந்து பயிற்சிகள்ல ஈடுபட்ட எனக்கு, 2017 ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற்ற உயரம் குறைந்தவர்களுக்கான 7-வது உலக தடகளப் போட்டிகள்ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. 62 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில இந்தியாவுல இருந்து 18 பேர் கலந்துக்கிட்டோம். நான் வட்டு, குண்டு, ஈட்டி எறியும் போட்டிகள்ல தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தேன். தற்போதுவரை தேசிய அளவுல அஞ்சு தங்கமும், சர்வதேச அளவுல நாலு தங்கமும், தேசிய அளவுல நாலு வெள்ளியும், சர்வதேச அளவுல ரெண்டு வெள்ளியும், தேசிய அளவுல நாலு வெண்கலமும், சர்வதேச அளவுல மூணு வெண்கலப் பதக்கமும் ஜெயிச்சிருக்கேன். இதுபோக, பல்வேறு வகையான பிரிவுப் போட்டிகள்ல பல வெற்றிகளைக் குவிச்சிருக்கேன். இப்படி விளையாட்டு ஒரு பக்கம் இருக்க, குடும்ப வருமானத்துக்காக வான்கோழிப் பண்ணை வெச்சு, சுயதொழில் செஞ்சுட்டு வரேன்.

கணேஷன்

இதுல கிடைக்கும் பணத்தை வெச்சுதான் தினமும் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்குப் போய் பயிற்சி செய்றேன். வான்கோழி வளர்ப்புல எனக்குப் போதுமான வருமானம் கிடைக்குது. வான்கோழிப் பண்ணையை நான், என் மனைவி, நண்பர் லோகேஸ்வரன் மூணு பேரும் சேர்ந்து கவனிச்சுக்கிறோம்.

வான்கோழி வளர்ப்பைப் பொறுத்தவரைக்கும் எனக்கு ரெண்டுலயிருந்து  மூணு பங்கு லாபம் கிடைக்குது. தென்னந்தோப்புல இருக்கும் இலை, புல், புச்சிகள்னு இயற்கையா காலார நடந்து மேயும். அதனால தீவனச் செலவு ரொம்பக் கம்மிதான். தண்ணியும் அதிகம் தேவையில்லை. வான்கோழி வளர்ப்பை, இளைஞர்கள் தைரியமாக எடுத்துச் செய்யலாம்'' எனத் தெரிவித்தார்.

கணேஷன்

கணேஷன் மனைவி சுவித்ரா கூறுகையில், ``என் கணவர், `எது செய்தாலும் அதுல நேர்மையைக் கடைப்பிடிக்கணும்'னு செல்வார். அவருக்கு நான் உறுதுணையா இருக்கிறதால, எதுலயும் என்னை முழுசா நம்பி இறங்குவார். அவர் விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் போனா, வான்கோழி வளர்ப்பை நானே முழுசா கவனிச்சுப்பேன். அவருடைய வெற்றிக் கனவுகள் தொடரணும்கிறதுதான் என் ஆசை. தொழிலையும் கவனிச்சுக்கிட்டு, விளையாட்டுலயும் ஆர்வம் செலுத்துறது அவருக்கு சவாலான விஷயம்தான். வரும் 2019 வேர்ல்டு சேம்பியன்ஸ் போட்டியிலயும் அவர் தங்கப்பதக்கத்தை அள்ளுவார்'' என்று உற்சாகத்தோடு தெரிவித்தார்.

வான்கோழி வளர்ப்பு

விளையாட்டுத் துறையிலும் சுயதொழிலும் வெற்றி நடைபோடும் உசிலம்பட்டி கணேஷுக்கு, பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்