அமெரிக்க ஓப்பனில் மகுடம் சூடிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில், நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி, நியூயார்க்கில் நடைபெற்றுவந்தது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், குரோஷியாவின் நோவோக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். ஜோகோவிச், காயம் காரணமாகக் கடந்த ஆண்டு அமெரிக்க ஓப்பனில் பங்கேற்கவில்லை. இதற்காக அறுவைசிகிச்சையும் மேற்கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு களத்திற்குத் திரும்பிய ஜோகோவிச், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், அவர் பட்டம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அர்ஜென்டினாவின் மார்டின் டெல்போட்ரோ, மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக  4 முறை அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப்போட்டியில் நடால் காயம் காரணமாக வெளியேறினாலும், அந்தப் போட்டியில் டெல்போட்ரோவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. எனவே, பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற பரபரப்பு மைதானத்தில் காணப்பட்டது.

இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். அமெரிக்க ஓப்பனில் இது அவருக்கு மூன்றாவது பட்டம். ஒட்டுமொத்தமாக, இது அவரது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!