`கடைசி டெஸ்டில் புதிய சாதனைகள்!’ - அலெஸ்டர் குக்-ன் இந்திய அணி சென்டிமென்ட் #ThankYouChef

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான குக் அபாரமாக விளையாடி சதமடித்தார். 

குக்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இறுதி டெஸ்ட்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத்தொடங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக், சிறப்பாக விளையாடி சதமடித்தார். இது டெஸ்ட்  கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 33வது சதமாகும். இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள குக், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சில சாதனைகளைச் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குக் 12,401 ரன்கள் எடுத்தபோது இலங்கை வீரர் சங்ககாராவை முந்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டி அரங்கில் அதிக ரன்கள் எடுத்த இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். மேலும், இந்தப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தன் அறிமுகப்போட்டி மற்றும் கடைசிப் போட்டியில் சதமடித்த 4வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். அவரின் முதலாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு எதிரானவை  ஆகும். கடந்த 2006ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் குக் அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவர் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் -க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. குக் 103 ரன்களுடனும், ரூட் 92 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தற்போது 283 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!