வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (10/09/2018)

கடைசி தொடர்பு:21:57 (10/09/2018)

464 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து! - 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தின் உதவியுடன் 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

 அலெஸ்டர் குக்

Photo Credit: ICC

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸின் முடிவில் 292 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. இதனால் 40 ரன்கள் முன்னிலைப்பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடியது. இதில், நேற்றைய 3 வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அலெஸ்டைர் குக் 46 ரன்களுடனும் ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

முந்தைய நாள் ஸ்கோருடன் 4 வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அலெஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்ஸில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது. 112.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனால், இந்தியாவுக்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, விஹாரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3, 2 ஓவர்களில் 2 ரன்களை மட்டுமே எடுத்து தவான், புஜாரா மற்றும் கேப்டன் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.