வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (11/09/2018)

கடைசி தொடர்பு:14:47 (11/09/2018)

சர்ச்சையைக் கிளப்பிய செரீனா 'கேலி கார்ட்டூன்'! - கண்டித்த 'ஹாரிபாட்டர்' எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்

மெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா பட்டம் வென்றார். அனல்பறந்த உச்சகட்ட ஆட்டத்தில் மிகவும் கோபத்துடனும் பதற்றத்துடன் ஆடிய செரீனாவுக்கு இருமுறை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அவர் புள்ளிகளை இழந்தார். ஒசாகாவுக்கு வெற்றி எளிதானது. இதனால் ஆத்திரமடைந்த செரீனா, நடுவருடன் சண்டையிட்டு, ராக்கெட்டைத் தரையில் வீசி எறிந்து உடைத்தார். மறுமுறை நடுவரைப் பார்த்து `திருடன்' எனக் கத்தினார். பல தவறுகள் செய்த செரீனா முடிவில் தோல்வியை சந்தித்ததோடு,  24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்தார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனை என்ற பெருமையுடன் ஒசாகா களத்தில் வெற்றிக் கோப்பையுடன் காட்சியளித்தார். 

செரினா கார்ட்டூன்

களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக செரீனாவுக்கு 17,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், செரீனாவின் செயலை விமர்சித்து 'மெல்பர்ன் ஹெரால்ட் சன்' பத்திரிகை கார்ட்டூன் ஒன்று வெளியிட்டுள்ளது. செரீனா துள்ளிக்குதிப்பது போன்றும் தரையில் டென்னிஸ் ராக்கெட் உடைந்து கிடப்பதும் போலவும் கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.  நடுவர், ஒசாகாவிடம், 'நீ அவரை வெற்றிபெற விடுவீர்களா?' என்று கேட்பது போன்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. கார்ட்டூனை மார்க் நைட் என்பவர் வரைந்துள்ளார். செரீனாவின் இனத்தைக் குறிக்கும் வகையில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஹரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங், உலகின் அற்புதமான விளையாட்டு வீராங்கனையை இனவெறியுடனும் ஆபாசமாகவும் வரைந்துள்ளதாக மார்க் நைட்டுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மார்க் நைட் மறுத்துள்ளார்.``களத்தில் செரீனா நடந்துகொண்ட விதத்தை விமர்சிக்கும் கார்ட்டூனாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். தயவு செய்து இனத்தையோ ஆண், பெண் பேதத்தையோ கொண்டு வர வேண்டாம்'' என்று பதில் அளித்துள்ளார். 

1999-ம் ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஒசாகாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க