வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (11/09/2018)

கடைசி தொடர்பு:15:06 (11/09/2018)

எப்போது தொடங்கவேண்டும் என்றல்ல... எப்போது முடிக்கவேண்டும் என்று தெரிந்தவர் அலெஸ்டர் குக்! #ThankYouChef

தனக்கு என்ன தெரியுமோ அதில்தான் தொடரவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தவர். இரண்டே ஆண்டுகள்தான் 20/20 கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அது தனக்கான ஃபார்மேட் இல்லை என்றவுடனே 20/20 கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டார். 

எப்போது தொடங்கவேண்டும் என்றல்ல... எப்போது முடிக்கவேண்டும் என்று தெரிந்தவர் அலெஸ்டர் குக்! #ThankYouChef

கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். அப்படிப்பட்ட விளையாட்டில் ஜென்டில்மேனாகவே இருந்து, ஜென்டில்மேனாகவே விளையாடி, உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வும் பெற்றிருக்கிறார் அலெஸ்டர் குக். 

``உங்களிடம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று எல்லோரும் எதிர்பார்க்கும்போதே கிளம்பிவிடவேண்டும். எப்போது இவன் போவான் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது'' என்று இந்தியாவுடனான நான்காவது டெஸ்ட்டின் இறுதியில் சொன்னார் குக். #EngvInd

குக்

ஆமாம்... குக் சொல்வது உண்மைதான் என்று உலகமும் நம்பியது. காரணம் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே குக்கின் பேட்டிங் மிகவும் சுமார். அதிகபட்ச ஸ்கோரே 29 ரன்கள்தாம். இப்படி ஒரு தொடர் முழுக்க அலெஸ்டர் குக், ஃபார்மில் இல்லாமல் இருந்ததேயில்லை. அதனாலோ என்னவோ சலிப்படைந்தார் குக். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் 33 வயதிலேயே ஓய்வை அறிவித்தார். ஆனால், அவர் ஓய்வை அறிவித்தபின் ஆடிய ஆட்டம்தான் கிளாஸிக்ஸ் ஆஃப் ஆல் டைம்!

``இந்த நான்கு நாள்களுமே ஒரு கனவுபோல இருக்கிறது'' என்றார் அலெஸ்டர் குக். ஆமாம், அவருக்கு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களுக்கே ஒரு கனவுபோலத்தான் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராகத்தொடங்கிய அலெஸ்டர் குக், கடைசி போட்டியையும் இந்தியாவுக்கு எதிராகவே முடித்திருக்கிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிஸில் அரை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் என்பதுபோலவே, ஓய்வுபெறும் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அரை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் எனக் கனவுபோலவே முடித்திருக்கிறார் இந்த கிரிக்கெட் குக்! 

குக்

2006-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து அணியில் முதல்முறையாக இடம்பெற்றிருந்தது அலெஸ்டர் குக் என்னும் அந்தப் புதுப் பெயர். இங்கிலாந்தின் ஸ்டார் ஓப்பனிங் பேட்ஸ்மேனான மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக்கிற்கு பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அணிக்குள் வந்தவர்தான் குக். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரு ஃப்ளின்டாஃப். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் என இருவருமே உச்சகட்ட ஃபார்மில் இருந்த சீஸன் அது. ஆனால், முதல் இன்னிங்ஸிலேயே தான் ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேன் என நிரூபித்தார் குக். முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள். இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் நாட் அவுட். ஹர்பஜன் சிங்கும், அணில் கும்ப்ளேவும் மாறி மாறி 60 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியும் குக்கின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அடுத்த பத்தாண்டுகளுக்கான ஓப்பனிங் பேட்ஸ்மேனை அன்று, அங்கே கண்டெடுத்தது.

2006 நாக்பூர் டெஸ்ட் முதல் 2018 ஓவல் டெஸ்ட் வரை இங்கிலாந்து விளையாடிய 158 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடியிருக்கிறார் அலெஸ்டர் குக். 12 ஆண்டுகள் இங்கிலாந்துக்காக இடைவிடாது டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். அவர் ஃபிட்னெஸில் எந்தச் சிக்கலும் வந்ததில்லை. காயங்கள் ஏற்பட்டதில்லை. அவுட் ஆஃப் ஃபார்மில் போனதேயில்லை.

குக்

தனக்கு என்ன தெரியுமோ அதில்தான் தொடரவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தவர். இரண்டே ஆண்டுகள்தாம் 20/20 கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அது தனக்கான ஃபார்மேட் இல்லை என்றவுடனே 20/20 கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டார். அதுவும் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி அது. 21 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருப்பார். 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்கும். உடனடியாக 20/20 கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக்கொண்டார். இதன்பிறகுதான் இவருக்கு இங்கிலாந்தின் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவி தேடி வந்தது. 

அதேபோல, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தியும் நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதுவும் கேப்டனாக இருக்கும்போதே 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டார். ஆமாம், தெரியாத சமையலறையில் செஃப்பாக அவர் இருக்க விரும்பவில்லை. அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் கவனம். 

டெஸ்ட் மட்டுமே ஆடும் பேட்ஸ்மேனான பின் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். மொத்தம் 97 இன்னிங்ஸ்கள். இதில் 8 சதங்களும், 19 அரை சதங்களும் அடித்திருக்கிறார். 263, 244, 243 என இரட்டைச் சதங்கள் மூன்று. இதில் கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் மிக முக்கியமானது. 327 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆக, இங்கிலாந்து தனது பேட்டிங்கை தொடங்கும். இங்கிலாந்தின் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டேயிருக்கும். ஆனால் அலெஸ்டர் குக் மட்டும் களத்தில் நிற்பார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவர் அன்று அடித்தது 244 ரன்கள். இங்கிலாந்து 491 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால், குக் மட்டும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இறுதிவரை நின்று ஆஸ்திரேலிய பெளலிங்கை வெளுத்தார்.

குக்

டெஸ்ட் போட்டிகளை கடந்த12 ஆண்டுகளாக இங்கிலாந்து கெத்தாக எதிர்கொள்ள ஒரே காரணமாக இருந்தவர் அலெஸ்டர் குக். ஒரு சீரிஸில் முழுமையாக அவர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்ததில்லை. முதன்முறையாக இந்தியாவுடனான இந்த சீரிஸில்தான் முதன் நான்கு டெஸ்ட்டுகளிலுமே சொதப்பினார். ``இனிமேல் உள்ளே ஒன்றும் இல்லை'' என்று நான்காவது டெஸ்ட்டுக்குப் பிறகு அடுத்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெறுகிறேன் என்றும் அறிவித்தார். ஆனால், அவரிடம் இருந்தது எதுவும் தீரவில்லை என்பதை நிரூபித்தன ஐந்தாவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களும்.

காலம் முழுக்க குக்கின் கனவுகளில் இடம்பிடிக்கும் இன்னிங்ஸாக அந்த 147 ரன்கள் இருக்கும். எப்போது தொடங்கவேண்டும் என்றல்ல... எப்போது முடிக்கவேண்டும் என்று தெரிந்தவர் குக். உச்சத்தில் இருக்கும்போதே, வெற்றியாளராக, மேட்ச் வின்னராக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார்! #ThankYouChef

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்