சுமார் அணி... சுமாரான கேப்டன்... கோலியின் தொடர் தோல்விக்கு 5 காரணங்கள்! #EngVInd

கோலி அவர் தலைமையேற்று நடத்தும் அணியை மிகச்சிறப்பான அணியாக நினைக்கலாம். ஆனால், அவர் தலைமையிலான தற்போதைய அணிதான் கடந்த 15 ஆண்டுகளில் சுமாரான அணி. அணி சுமாராக இருப்பதற்கு காரணமே சுமாரான கேப்டனாக கோலி இருப்பதுதான் என்பதே சோகத்திலும் சோகம்!

சுமார் அணி... சுமாரான கேப்டன்... கோலியின் தொடர் தோல்விக்கு 5 காரணங்கள்! #EngVInd

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி இதுதான் என்கிறார் கேப்டன் கோலி. அவர் சொல்வதிலேயே இன்னோர் உள் அர்த்தமும் இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் சிறப்பான அணிக்கு தலைமைதாங்கியிருக்கும் சிறப்பான கேப்டனும் அவர்தான் என்பதே. ஆனால் கோலி அவர் தலைமையேற்று நடத்தும் அணியை மிகச்சிறப்பான அணியாக நினைக்கலாம். ஆனால், அவர் தலைமையிலான தற்போதைய அணிதான் கடந்த 15 ஆண்டுகளில் சுமாரான அணி. அணி சுமாராக இருப்பதற்கு காரணமே சுமாரான கேப்டனாக கோலி இருப்பதுதான் என்பதே சோகத்திலும் சோகம்! 

சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுவதில் இருந்துதான் கோலியின் சொதப்பல் தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளே கோலியின் கேப்டன்ஸியை அலசுவதற்கான நல்ல உதாரணங்கள். இந்த ஐந்து டெஸ்ட்டையும் கோலியின் தோல்விக்கான ஐந்து காரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

கோலி

1. முதல் டெஸ்ட் - பர்மிங்ஹாம்
2014 இங்கிலாந்து தொடரில் பேட்ஸ்மேன் கோலி மொத்தமாக அவுட். 10 இன்னிங்ஸ் ஆடி மொத்தமாகவே 134 ரன்கள்தான் எடுத்திருந்தார் கோலி. ஆனால், கோலி அப்போது கேப்டன் இல்லை. அதனால் இந்த முறை கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடனேயே, கூடுதல் பிரஷருடனேயே இங்கிலாந்து தொடரை தொடங்கினார் கோலி. முதல் இன்னிங்ஸிலேயே 149 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் என பேட்ஸ்மேன் கோலி சூப்பர் ஹிட். ஆனால் வென்றிருக்க வேண்டிய மேட்சை தோற்றது இந்திய அணி. காரணம் ப்ளேயிங் லெவன். 
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே பார்க்கப்பட்டு, அதற்காக மட்டுமே தயாராகி இங்கிலாந்து சென்ற செத்தேஷ்வர் புஜாரா இல்லாத ப்ளேயிங் லெவனை முதல் டெஸ்ட்டில் அறிவித்து அதிரவைத்தார் கேப்டன் கோலி.  அதேப்போல் பேட்டிங் ஆர்டரிலும் சில குழப்பங்கள்.
ஹர்திக் பாண்டியாவை ஸ்பெஷலிஸ்ட் ஆல் ரவுண்டராக அணிக்குள் எடுத்திருந்தார் கோலி. ஆனால், அவரை முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசவைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பாண்டியா பந்து வீச வேண்டிய சூழல் இருந்தும் அவருக்கு பெளலிங் வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் பாண்டியாவை அணிக்குள் ஏன் எடுத்தார் கோலி என்பதற்கான எந்த நியாயமும் இல்லை. 
முதல் டெஸ்ட்டுக்கு முந்தைய நாளே இங்கிலாந்து அணி தனது ப்ளேயிங் லெவனை அறிவித்தது. அதில் ஆதில் ரஷித் மட்டுமே ஒரே ஸ்பின்னர். அதே நம்பிக்கையில் கோலியும் ஒரே ஸ்பின்னரோடு அணியை அறிவித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில் அஷ்வினை மட்டுமே 47 ஓவர்கள் பந்துவீசவைத்தார் கோலி. அவர் ஏழு விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்குத்தான் சாதகமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் ஸ்பெஷலிஸ்ட் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிவாய்ப்பின் நுழைவில் இருந்த இந்திய அணியை வீழ்த்தினார்.

கோலி

2. இரண்டாவது டெஸ்ட் - லார்ட்ஸ்!
கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட். வரலாற்றில் இந்த மைதானத்தில் இரண்டே முறைதான் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கிறது என்பதால் இந்த முறை கோலி நிச்சயம் வெற்றிக்கான அணியுடன் வருவார் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும். ஆனால் இந்த முறையும் கோலி தந்தது ஏமாற்றமே!
லார்ட்ஸில் முதல் நாள் மழை பெய்தததால் இரண்டாவது நாளில் இருந்துதான் ஆட்டம் தொடங்கியது. மழை பெய்திருப்பதால் சரியான ப்ளேயிங் லெவனை தேர்தெடுத்திருக்கக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் சொதப்பிய தவானுக்கு பதிலாக புஜாரா அணிக்குள் கொண்டுவரப்பட்டது ஓகே.  ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் பிட்ச்சில் உமேஷ் யாதவ் கழற்றிவிடப்பட்டு இரண்டாவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் அணிக்குள் சேர்க்கப்பட்டார். ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக 2014 இங்கிலாந்து சீரிஸில், அதுவும் லார்ட்ஸில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அணிக்குள் சேர்க்கப்படவில்லை என மீண்டும் சொதப்பல்களின் உச்சம். 
மூன்று நாள்களிலேயே மேட்ச் முடிந்தது. இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி. முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் 130 ரன்களுக்கு ஆல் அவுட்.

3. மூன்றாவது டெஸ்ட் - நாட்டிங்ஹாம்!
மூன்றாவது டெஸ்ட்தான் கோலிக்கு நம்பிக்கை கொடுத்த டெஸ்ட். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் அணிக்குள் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவருக்கு பதிலாக இன்னொரு சொதப்பலான தவான் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஹர்திக் பாண்டியாவின் இடம் அணிக்குள் நீடித்தது. அவர்தான் மூன்றாவது டெஸ்ட்டின் ஆபத்பாந்தவன். 5 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார்.

ஆனாலும் இந்த ப்ளேயிங் லெவனும் இந்தியாவின் சரியான ப்ளேயிங் லெவன் இல்லை. தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிய தவான் அணிக்குள் வந்தார். அவர் மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதாலயே நான்காவது டெஸ்ட்டிலும் இடம்பிடித்தார். 

 

கோலி

4. நான்காவது டெஸ்ட் - சவுத்தாம்ப்டன்!
2-2 என தொடரை சமநிலைக்கு கொண்டுவரும் வாய்ப்புகள் இருந்தும் பொறுப்பில்லாத பேட்ஸ்மேன்களால் தோல்வியைத் தழுவியது இந்தியா. மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதாலும், தொடர்ந்து ப்ளேயிங் லெவனை மாற்றிக்கொண்டேயிருப்பவர் என்கிற விமர்சனங்களாலும் மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்ற அதே அணியைக் கொண்டுவந்தார் கோலி. ஆனால் அந்த அணி நாட்டிங்ஹாம் பிட்ச்சுக்கு ஓகே. சவுத்தாம்ப்டனுக்கு?

தவான் - கே.எல் ராகுல் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் எப்போதும்போல சொதப்பியது. இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இது டெஸ்ட் மேட்ச் என்பதை மறந்து டி20 போட்டிகளில் ஆடுவதுபோல பந்துகளை வீணாக்கக்கூடாது என்கிற உயரிய கொள்கையோடு அடித்து ஆட விக்கெட்டுகளை இழந்துகொண்டேயிருந்தனர். இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் பெளலிங் அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் பேட்டிங்  மிகப்பெரிய சொதப்பல். புஜாரா சதமடித்தார். கேப்டன் கோலி ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே ஏமாற்றம். 245 ரன்கள்தான் டார்கெட். கோலி, ரஹானே இருவரும் அரை சதங்கள் அடித்தார். ஆனால் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது இந்திய அணி. ஆஃப் ஸ்பின்னுக்கு சாதமான பிட்ச்சில் மொயின் அலி விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அஷ்வினால் விக்கெட்டுகள் எடுக்கமுடியவில்லை என்பதுதான் பரிதாபம். 

கோலி

5. ஐந்தாவது டெஸ்ட் - ஓவல்!
தொடரை இழந்துவிட்டதால் கொஞ்சம் ரிலாக்ஸான கேப்டன் கோலி இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தார். ஆனால், ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவானை மாற்ற முன்வரவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரிக்கும், அஷ்வினுக்கு பதிலாக  ஜடேஜாவுக்கும் வாய்ப்பளித்தார் கோலி. இருவருமே தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு சரியானது என்பதை நிரூபித்தார்கள். ஹனுமா விஹாரி முதல் இன்னிங்ஸில் மிகவும் இக்கட்டான சூழலில் 56 ரன்கள் அடித்தார். ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் எடுத்ததோடு 86 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் நின்றார். 

இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல், பன்ட் இருவரும் சதம் அடித்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியடைந்தது இந்திய அணி. புஜாரா, கோலி, விஹாரி என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட். 

சொதப்பல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஸ்பின் ட்ராக்கில் விக்கெட் எடுக்கத்திணறிய ஸ்பின்னர் என இங்கிலாந்து தொடரில் கோலி கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது. ஆனால் கோலி இன்னும் இதுதான் சிறந்த அணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கோலியின் இந்த எண்ணம் தொடர்ந்தால் அடுத்து ஆஸ்திரேலியாவிலும் காத்திருக்கின்றன அதிர்ச்சிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!