வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (13/09/2018)

கடைசி தொடர்பு:12:06 (13/09/2018)

`இளைஞர்களுக்கு வழிவிடும் நேரம்!’ - ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

சர்தார் சிங்

இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றவர் என்ற பெருமைபெற்ற சர்தார் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணி சார்பில் 350 போட்டிகளில் பங்கேற்ற அவர், அணியின் கேப்டனாக 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஏறக்குறைய
8 ஆண்டுகள் கேப்டனாக இருந்தார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, அவர் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். நடப்புச் சாம்பியனாகத் தொடரில் களமிறங்கிய இந்திய அணி, வெண்கலத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டது. இந்தத் தொடரில் மிட்ஃபீல்டு வீரரான சர்தார் சிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்திய அணியின் பயிற்சி முகாமுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வீரர்கள் கொண்ட பட்டியலில் சர்தார் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் ஓய்வு முடிவை அறிவித்ததாகத் தெரிகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, `2020 ஒலிம்பிக் தொடர் வரை விளையாடுவேன்’ என்று சர்தார் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய சர்தார் சிங், ``சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது என நான் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய 12 ஆண்டுக்கால கெரியரில் போதுமான அளவு ஹாக்கி விளையாடிவிட்டேன் என்று நம்புகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது. சண்டிகரில் இருக்கும் என் குடும்பத்தார், இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் என் நண்பர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை அறிவித்துள்ளேன். ஹாக்கியைத் தாண்டி உள்ள வாழ்க்கை குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம்’’ என்று அவர் தெரிவித்தார். ஓய்வு முடிவு குறித்து நாளை (14.9.2018) நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்.